படுத்துக்கொண்டே ஜெயிக்கும் வித்தையை கற்றுக் கொடுத்தேன்: ராமதாஸ் பேட்டி

21

விழுப்புரம்: ''பா.ம.க., மாவட்ட செயலாளர்களுக்கு 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே ஜெயிப்பதற்கான வித்தையை சொல்லிக் கொடுத்தேன்'' என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.


அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்ய ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார். இந்நிலையில், இன்று (மே 16) விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க., மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.



கூட்டத்தில் 216 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 15 பேர் மட்டுமே பங்கேற்றனர். பா.ம.க, செயல் தலைவர் அன்புமணி கூட்டத்திற்கு வரவில்லை. இதற்கிடையே நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது: 50 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும். ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினேன். அவர்களின் ஆலோசனையை கேட்டேன்.


களைப்போடு இருப்பதால் சிலர் கூட்டத்துக்கு வரவில்லை. கூட்டத்தை புறக்கணித்தவர்கள் மீது நடவடிக்கை தேவையில்லை. பா.ம.க.வில் கோஷ்டி மோதல் இல்லை. கூட்டத்தில் பங்கேற்க அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. தனித்து நின்றாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம்.


சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது. 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே ஜெயிப்பதற்கான வித்தையை சொல்லிக் கொடுத்திருக்கிறேன். 50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளை பரிமாறிக் கொள்வதற்கான கூட்டம் நடந்தது. வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணி நிச்சயம்.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

Advertisement