லெட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் திருப்பணிகள் தீவிரம்

சின்னமனூர்: சின்னமனூர் லெட்சுமிநாராயணப்பெருமாள் கோயில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பணிகள் நிறைவு செய்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலைய துறை திட்டமிட்டுள்ளது.

சின்னமனூரில் பிரசித்தி பெற்ற லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இக் கோயிலில் நின்ற நிலையில் ஆளுயரத்திற்கு பெருமாள் நிற்பதும், காலடியில் ஆஞ்சநேயர் இருப்பதும் தனிச்சிறப்பாகும். பெருமாளின் காலடியில் ஆஞ்சநேயர் இருப்பது வேறு கோயில்களில் காண முடியாத ஒன்றாகும்.

இந்த கோயிலில் திருப்பணி நகரின் முக்கிய பிரமுகர்கள் உபயதாரர்களாக செய்து வருகின்றனர். இதில் வெளிப் பிரகாரம் தரைத் தளம் புதுப்பித்தல், உள்பிரகாரம் புதுப்பித்தல், ராஜகோபுரம் பொம்மைகள் சீரமைத்தல் மற்றும் புனரமைத்தல், ராஜ கோபுரத்திற்கு வர்ணம் பூசுதல், மடப்பள்ளி புதுப்பித்தல், சிறிய மண்டபம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பணியையும் ஒரு உபயதாரர் வீதம் 10 க்கும் மேற்பட்ட உபயதாரர்கள் திருப்பணிகளை செய்து வருகின்றனர். இரண்டு மாதங்களுக்குள் நிறைவு பெறும் என்றும், அதன் பின் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றும் ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement