மா.செ.,க்களுக்கு ராமதாஸ் அழைப்பு; என்ன நடக்குமோ என அன்புமணி தவிப்பு

மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலர்களின் அவசர கூட்டத்திற்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பா.ம.க., மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலர்கள் கூட்டம், இன்று காலை 10:00 மணிக்கு, திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் நடக்கவுள்ளது. இதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்' என, கூறியுள்ளார்.
கடந்த, 2024 டிசம்பர் 28ல், பா.ம.க., இளைஞரணி தலைவராக, தன் மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை, ராமதாஸ் நியமித்துள்ளார். அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 10ல், பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டு, 'நானே தலைவர்' என, ராமதாஸ் அறிவித்தார். ஆனால், இதை ஏற்காத அன்புமணி, தொடர்ந்து தலைவராக செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையில், கடந்த 11ம் தேதி, மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு மாநாடு, வன்னியர் சங்கம் சார்பில் மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. அதில் கலந்து கொண்ட ராமதாஸ், 'என்னை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள். கட்சிக்காக உழைக்காமல், வேறு எதையோ செய்து கொண்டிருக்கிறீர்கள். இனி உழைக்காமல் இருக்கும் ஒவ்வொருவரின் கணக்கையும் முடித்து விடுவேன்.
பாராட்டு இல்லை
அவர்கள் எம்.எல்.ஏ., வாக இருந்தாலும் பார்க்க மாட்டேன்; வங்கக் கடலில் வீசி விடுவேன். என் எண்ணத்துக்கு மாறாக நடக்க முயன்றால் அது முடியாது. ஒவ்வொருவரையும் கண்காணிக்க, வேறு ஒரு நல்ல பையனை நியமித்து விடுவேன். கட்சிக்கு உள்ளேயே கூட்டணி, கட்சிக்குள்ளேயே கூட்டு. இதெல்லாம் நடக்காது தம்பி; நடக்காது கண்ணு' என, எச்சரிக்கை தொனியில் கடுமையாக பேசிஇருந்தார்.
ஆனால், மாநாட்டை மிகப் பிரம்மாண்டமாக நடத்த முழு ஏற்பாடு செய்த, கட்சியின் தலைவர் அன்புமணி குறித்தோ, அவருடைய குடும்பத்தினர் குறித்தோ, மாநாட்டில் பேசிய ராமதாஸ், ஒரு வார்த்தை கூட பாராட்டிக் குறிப்பிடவில்லை. இதை தன்னுடைய வருத்தமாக கட்சியினரிடம் வெளிப்படுத்தி வந்தார் அன்புமணி.
இச்சூழலில், தைலாபுரம் தோட்டத்தில் மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலர்களின் கூட்டத்திற்கு, அவசரமாக ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளது, அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை -- மகன் இடையே நிலவும் கசப்பு முடிவுக்கு வராத நிலையில், மாவட்டச்செயலர்கள் கூட்டத்திற்கு, ராமதாசே அழைப்பு விடுத்திருப்பதால், என்ன முடிவு எடுக்கப் போகிறார்; அதை அன்புமணி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற கேள்வி, அக்கட்சி வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இதுகுறித்து, கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கடந்த பார்லிமென்ட் தேர்தலின்போது, அ.தி.மு.க.,வுடன் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என சொல்லி வந்த ராமதாஸ், அ.தி.மு.க., - எம்.பி.,யான சி.வி.சண்முகம் வாயிலாக, அதற்கான முழு ஏற்பாட்டையும் செய்து வைத்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் பா.ஜ., தலைவர்கள் வற்புறுத்தலுக்கு ஆளான அன்புமணி, ராமதாஸை வற்புறுத்தி, பா.ஜ.,வுடனான கூட்டணிக்கு சம்மதிக்க வைத்தார்.
கட்சி முழுமையாக தோற்று விட்டதில், ராமதாஸுக்கு அன்புமணி மீது கடும் கோபம். சாதுர்யமாக முடிவெடுத்து தேர்தல் கூட்டணி அமைக்க அன்புமணிக்குத் தெரியவில்லை என ராமதாஸ் எண்ணுகிறார். அதனால், கட்சியை முழுமையாக கையில் எடுத்து, தானே கட்சியின் மொத்த நிர்வாகத்தையும் நடத்துவதோடு, தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது என முடிவெடுத்திருக்கிறார்.
அடுத்தகட்டம்
தன்னுடைய முடிவுகளை செயல்படுத்தும், செயல் தலைவராக மட்டும் கட்சியில் அன்புமணி செயல்பட்டால் போதும் என முடிவெடுத்துத்தான், அவரை செயல் தலைவர் என அறிவித்தார். அதன் அடுத்தகட்டமாகத்தான், கட்சியின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். அடுத்தடுத்து அரசியல் ரீதியில் தான் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து, இன்றைய கூட்டத்தில் பேச திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
மேலும்
-
டில்லியில் சரிந்து விழும் நிலையில் 4 மாடி கட்டடம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்
-
நீர்த்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; உதவி இயக்குநரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்
-
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,560 குறைவு; இன்று ரூ.880 அதிகரிப்பு
-
10ம் வகுப்பு 'ரிசல்ட்' வெளியானது: 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
பஞ்சாப் எல்லையில் பாக்., ட்ரோன் மீட்பு
-
2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி