50 லட்சம் பேர் ரேஷனில் கைரேகை பதிவு செய்யவில்லை; மே 31 வரை தான் அவகாசம்

ராமநாதபுரம் : தமிழகத்தில் ஏ.ஏ.ஒய்., மற்றும் பி.எச்.எச்., ரேஷன் கார்டு உறுப்பினர்களில் இதுவரை 50 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கைரேகை பதிவு செய்யாமல் உள்ளனர். பதிவு செய்ய மே 31 வரை மட்டுமே அவகாசம் உள்ளது.

தமிழகத்தில் 2 கோடிக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் ஏ.ஏ.ஒய்., மற்றும் பி.எச்.எச்., ரேஷன் கார்டுகளில் 3 கோடியே 50 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் உறுப்பினர்கள். ஏ.ஏ.ஒய்., கார்டுக்கு மாதம் 35 கிலோ அரிசி, பி.எச்.எச்., கார்டுக்கு குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் வரை 20 கிலோ அரிசி, 4 பேருக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி, சர்க்கரை அதிகபட்சமாக 2 கிலோ வழங்கப்படுகிறது.

என்.பி.எச்.எச் கார்டிற்கு எத்தனை நபர்கள் இருந்தாலும் அதிகபட்சம் 20 கிலோ அரிசி, நபர் ஒன்றுக்கு அரை கிலோ வீதம் சர்க்கரை வழங்கப்படுகிறது. ஏ.ஏ.ஒய்., மற்றும் பி.எச்.எச்., கார்டுகளில் முறைகேடு தவிர்க்க கைரேகை பதிவை 100 சதவீதம் முடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 50 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கைரேகையை பதிவு செய்யவில்லை.

வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், சிலர் மாவட்டம், மாநிலத்திற்கு வெளியே பணிபுரிவதாக தெரிகிறது. தாங்கள் வசிக்கும் மாவட்டம், மாநிலத்தில் ஐ.எம்.பி.டி.எஸ்., அல்லது e--KYC மூலம் கைரேகை பதிவை மே 31க்குள் முடிக்கலாம் என்றனர்.

Advertisement