பாக்.,கிற்கு நெருக்கடி ஏற்படுத்த மத்திய அரசின் அடுத்த திட்டம்!

16


புதுடில்லி: அனைத்து கட்சி எம்.பி.,க்கள் கொண்ட குழுவை, வெளிநாடுகளுக்கு அனுப்பி இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

காஷ்மீரின் பஹல்காமின் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.


இதனைத் தொடர்ந்து, கடந்த 7 முதல் 10 ம் தேதி வரை நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் நீடித்தது. இது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தின. கடந்த 10 ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தின் டிஜிஎம்ஓ வேண்டுகோளை தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா சம்மதித்தது.


பிறகு, பல்வேறு நாட்டு தூதர்கள், தூதரக அதிகாரிகள், பிரதிநிதிகள், பாதுகாப்பு அதிகாரிகளிடம் மத்திய வெளியுறவுத்துறை செயலர் மற்றும் ராணுவ அதிகாரிகள் சந்தித்து இந்தியாவின் நடவடிக்கை குறித்து விளக்கமளித்தனர்.


இந்நிலையில், அடுத்த கட்டமாக பாகிஸ்தானுக்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.


இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சமீபத்தில் நடந்த மோதல், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து வெளிநாடுகளுக்கு நேரில் விளக்கம் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள் கொண்ட குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.


வரும் 22ம் தேதிக்கு பிறகு இந்த பயணம் இருக்கும். மூத்த எம்.பி.,க்கள் இக்குழுவிற்கு தலைமை தாங்க உள்ளனர். இக்குழுவில் 5 முதல் 6 எம்.பி.,க்கள் இடம்பெறுவார்கள். இந்த பயணத்திற்கான ஏற்பாடுகளை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஏற்பாடு செய்து வருகிறார். அமெரிக்கா, பிரிட்டன், தென் ஆப்ரிக்கா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமீரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு எம்.பி.,க்கள் குழுவினர் செல்ல உள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement