செல்வப்பெருந்தகை மீதான முறைகேடு புகார்: சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

4


சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தை செயல்படுத்தும் தனியார் நிறுவனத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் உறவினரும் இயக்குநராக உள்ளாரா என்பதை அறிய விரும்புவதாக சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.


தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவர்களை தொழில் முனைவோர்களாக்கும் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.


இந்தத் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது எனக்கூறி யுடியூபர் சவுக்கு சங்கர் சென்னை ஐகோட்டில் அவர் தாக்கல் செய்த மனுவில், 'இந்த திட்டத்தை அமல்படுத்தும் பணிகள் சட்டவிரோதமாக தனியார் அமைப்புக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை முக்கிய பங்கு வகித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.


இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரித்து வருகிறது. கடந்த 14 ம் தேதி விசாரித்த போது, இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர்.


இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதி சுவாமிநாதன், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனிடம் ,' தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் வலியுறுத்தியதாலேயே, தலித் இந்திய தொழில் வர்த்தக சபை (டிஐசிசிஐ) இந்த திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது என 2024 டிச.,16ல் முதல்வரின் அறிக்கையை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார்.


அரசுடன் இணைந்த பிறகு தான், இந்த திட்டத்தை செயல்படுத்த டிஐசிசிஐயின் தலைவர் ரவி குமார் நாரா மற்றும் செல்வப்பெருந்தகையின் உறவினர் வீரமணி ஆகியோர் இணைந்து ஜென் கிரீன் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தை துவக்கியதாக மனுதாரர் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு உண்மைதானா என அறிய விரும்புகிறோம். இது உண்மையாக இருந்தால், உங்களுக்கு தான் பிரச்னை எனக்கூறினார். மேலும் சென்னை மெட்ரோபொலிட்டன் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீரேற்று வாரியம், இது குறித்த அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மே 21க்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement