இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 143 பேர் பலி

4


காசா: காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் தரை, வான் மற்றும் கடல் வழியாக நடத்திய தாக்குதலில் 143 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, 2023 அக்., 7 முதல் மோதல் நடந்து வருகிறது. மோதலை நிறுத்தும்படி இரு தரப்பையும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.


இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், பிணைக்கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் தாமதம் காட்டியதால், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலில் இறங்கியது. சில நாட்களுக்கு முன்னர் இஸ்ரேலின் ஜபாலியா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கடந்த 12 மணி நேரத்தில் காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் தரை, கடல் மற்றும் வான்வெளி வாயிலாக நடத்திய தாக்குதலில் 143 பேர் உயிரிழந்துள்ளனர். ஒன்பது வீடுகள், டென்ட்கள் மற்றும் முகாம்கள் ஆகியன பலத்த சேதம் அடைந்தன. இந்த இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கி உள்ளனர்.
ஆனால், உயிருக்கு பயந்து உறவினர்களே அவர்களை மீட்க முடியாமல் தப்பி ஓடும் நிலை அங்கு நிலவி வருகிறது.

அதே நேரத்தில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மட்டும் அழிக்கப்பட்டதாகவும், அதில் ஏராளமான பயங்கரவாதிகள் உயிரிழந்து உள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.மேலும், இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

Advertisement