தவிடுபொடியான சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட விமர்சனங்கள்

சி.பி.எஸ்.இ., பாட திட்டம் தொடர்பாக எழுந்த விமர்சனங்களை அரசு பள்ளிகள் தவிடுபொடியாக்கி சத்தமில்லாமம் சாதித்துள்ளன.

புதுச்சேரி அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த முடிவு செய்த அரசு தமிழக அரசின் பாடத்திட்டத்தில் இருந்து சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு முழுதுமாக மாறியது. இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது.அதற்கு ஏற்றாற்போல், கடந்தாண்டு தமிழக அரசின் பாட திட்டத்தின் கீழ் கடைசியாக தேர்வு எழுதிய புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் சறுக்கி அதிர்ச்சியை கொடுத்தனர்.

இதனால், பல்வேறு கேள்விக் கணைகள் புதுச்சேரி அரசினை நோக்கி எழுந்தன. ஈசியான மாநில அரசின் பாடத்திட்டத்தில் சாதிக்க முடியாத புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்கள், கடினமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ்எப்படி தேர்வு எழுதி சாதிக்க முடியும்.

அவர்களது எதிர்கால வாழ்வினை இருட்டில் அரசு தள்ளுகிறது என எதிர்ப்பு குரல்கள் ஓங்கி ஒலித்து அச்சத்தை வெளிப்படுத்தின.

ஆனால், வெளியாகியுள்ள சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அரசு எடுத்த முடிவுகள் எல்லாம் சரி தான். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் புதுச்சேரி மாணவர்களாலும் சாதிக்க முடியும் என, அழுத்தமாக நிருபித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

தேர்ச்சி சதவீதம்



கடந்தாண்டு தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் 78.10 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று இருந்தனர். ஆனால் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் 81.25 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாகியில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய 326 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த பிராந்தியத்தில் தேர்ச்சி 100 சதவீதமாக உள்ளது.

இதேபோல் ஏனாமில் தேர்வு எழுதிய 283 மாணவர்களில் 281 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 99.29 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். காரைக்கால் பிராந்தியத்திலும் தேர்வு எழுதிய 1137 மாணவர்களில் 971 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். காரைக்காலில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி 85.4 சதவீதமாக உள்ளது. புதுச்சேரி பிராந்தியத்தில் தேர்வு எழுதிய 4,046 மாணவர்களில் 3,128 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 77.31 சதவீதமாக உள்ளது. இப்படி அரசு பள்ளிகள் தேர்ச்சி பெறுவது அரிது.

தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் இருந்தபோது அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அளிப்பது அத்திபூத்தாற்போல் எப்போதாவது தான் நடக்கும். கடந்தாண்டு தமிழக அரசின் பாட திட்டத்தின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எதிர்கொண்டபோது புதுச்சேரி-7, காரைக்காலில் 1 என மொத்தமே 8 அரசு பள்ளிகள் தான் 100க்கு 100 தேர்ச்சியை கொடுத்தன. ஆனால் இந்தாண்டு சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் எத்தனை அரசு பள்ளிகள் 100 சதவீததேர்ச்சியை கொடுத்தன என்று ஆராய்ந்தால் வியப்பு தான் நமக்குஏற்படுகிறது.

புதுச்சேரியில் -25, காரைக்கால்-5, மாகி-6, ஏனாம்-6 என மொத்தம் 42 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை கொடுத்துள்ளன. அதுவும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் ௧௦௦ சதவீத தேர்ச்சி கொடுத்து விமர்சனங்களை தவிடுபொடியாக்கியுள்ளன.

பத்தாம் வகுப்பு மட்டும் அல்ல. பிளஸ் 2 பொதுத் தேர்விலும் இந்த முறை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் 100 சதவீத தேர்ச்சியை எட்டிய பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்தாண்டு தமிழ்நாட்டு அரசின் சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் ஒரே ஒரு அரசு பள்ளி தான் 100 சதவீத தேர்ச்சியை கொடுத்து திருஷ்டி கழித்து இருந்தது. ஆனால் இந்தாண்டு சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் 100 சதவீத தேர்ச்சி கொடுத்த பள்ளிகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா. புதுச்சேரியில்-7, காரைக்கால்-1, ஏனாம்-1 என மொத்தம் 9 அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சியை கொடுத்துள்ளன.

இதுதவிர 90 சதவீதத்திற்கு மேல் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாமில் 23 அரசு பள்ளிகள் தேர்ச்சியை கொடுத்துள்ளன.

90 சதவீதத்திற்கு மேல் புதுச்சேரியில் மட்டும் 19 அரசு பள்ளிகளும், காரைக்காலில்-1, மாகி- 3 பள்ளிகள் இந்தாண்டு தேர்ச்சியை கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.

பிளஸ் 2 பொதுத்தேர்வு சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் ஏனாமில் 100 தேர்ச்சி, மாகி-88.72 சதவீதம், காரைக்கால்-80.22,புதுச்சேரியில் -93.17 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நான்கு பிராந்தியத்தை உள்ளடக்கிய சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்ச்சி 90.30 சதவீதம். இதில் அரசு பள்ளிகள் மட்டும் 86.27 சதவீதம்.

எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் புதுச்சேரி அரசு பள்ளிகள் நான்கு பிராந்தியங்களிலும் சத்தம் இல்லாமல் சாதித்துள்ளது நிருபணமாகியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

எல்லாம் சரி, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் சறுக்கல்கள் சவால்களே இல்லையா என பலரும் கேள்வி முன் வைக்கலாம். முதல் முறையாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சில சவால்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதனை சரி செய்தாலும் தேசிய அளவிலும் புதுச்சேரி மாணவர்களால் சாதிக்க முடியும் என்கின்றனர் கல்வித் துறை அதிகாரிகள்.

கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது: பிளஸ் 2 வகுப்பு பயிலும் 500க்கு 450க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இருப்பினும், ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் சிறப்பாக இருந்தபோதிலும், பாட வாரியாக மாணவர்களின் தனிப்பட்ட செயல்திறனுக்கு நிறைய முன்னேற்றம் தேவைப்படுகிறது.

ஆனால் ஆரம்ப மதிப்பீடு என்னவென்றால், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டதால் மாணவர்களின் கற்றல் செயல்திறன் அதிகரித்துள்ளது. அதிக முன்னேற்றத்திற்கு உத்தரவாதம் அளித்துள்ளது. எனவே அடுத்தடுத்த ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் எய்ம்ஸ்,ஐ.ஐ.டி.,போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் அளவிற்கு அதிக மதிப்பெண்களைப் பெற முடியும். அதற்கேற்ப அரசு பள்ளி மாணவர்கள் மீதான கவனம் இந்த கல்வியாண்டில் அதிகமாக இருக்கலாம்' என்றனர்.

ஊக்கமளிக்கிறது;

அதிக தேர்ச்சி கொடுத்துள்ள ஆசிரியர்கள் கூறுகையில் 'முந்தைய தமிழக அரசின்பாடத்திட்டத்தின் கீழ் இருந்தபோது, அரசு பள்ளிகளின் 100 சதவீத தேர்ச்சி என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்குஒன்றிரண்டாக தான் இருக்கும். இந்தாண்டு பல பள்ளிகள் 100 சதவீத முடிவுகளைப் பெறுவது இதுவே முதல் முறை. இது ஆசிரியர்களாகிய எங்களுக்கு உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது.

சி.பி.எஸ்.இ., அறிமுகப்படுத்தப்பட்டதால் தேர்ச்சி சதவீதத்தைப் பற்றி உண்மையில் கவலைப்பட்டோம். ஆனால் இப்போது அந்த கவலை இல்லை. அரசு பள்ளி மாணவர்கள் கடின உழைப்பாளிகள். முதல் முறை என்பதால் சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வுகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் பல மாணவர்களும் நல்ல மதிப்பெண்களைப் பெற சிரமப்பட்டுள்ளனர். எனவே, நடுநிலைப் பள்ளி மட்டத்தில் மொழிப் பகுதியை மேம்படுத்த மாணவர்களை தயார்படுத்த வேண்டும்.

பள்ளி கல்வித் துறை ஆய்வு அதிகாரிகள், நிறுவனங்களின் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அர்ப்பணிப்பு பணி நல்ல தேர்ச்சி சதவீதத்தை அடைய உதவியது.


எங்கள் அடுத்த முயற்சி தனிப்பட்ட மதிப்பெண்களை மேம்படுத்துவதும், மாணவர்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமாக சாதிக்க உதவுவதும் ஆகும். கடந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க நாங்கள் நிறைய முயற்சிகளை எடுத்துள்ளோம், அது இந்த கல்வியாண்டும் தொடரும்' என்றனர்.

-நமது நிருபர்-

Advertisement