சுதந்திரமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு! நடிகர் தாமு கவலை

பல்லடம் : ''சுதந்திரமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடும்; கட்டுப்பாடுடன் இருக்க வேண்டிய மாணவர்களுக்கு சுதந்திரமும் உள்ளது'' என்று நடிகர் தாமு கவலை தெரிவித்தார்.

பல்லடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:

அப்துல் கலாம் வழியை பின்பற்ற துவங்கியது எப்படி?

நிகழ்ச்சி ஒன்றில் 'மிமிக்ரி' செய்வதற்காக என்னை அழைத்திருந்தனர். அப்துல் கலாம் வர தாமதமானதன் காரணமாக, எனது 'மிமிக்ரி' பயண அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து வந்தேன். மேடையில் நான் பேசிக் கொண்டிருந்தபோதே வந்த அப்துல் கலாம், என்னை மிகவும் பாராட்டினார்.

இதுதான் அப்துல் கலாமுடன் எனக்கு கிடைத்த முதல் வாய்ப்பு. அப்போதே மாணவர்களை சந்திக்கும் பயணத்தில் வந்துவிடுமாறு என்னை அழைத்தார். அவரை பின்பற்றி இன்றுவரை, 31 லட்சம் மாணவர்களை சந்தித்துள்ளேன். அவர் வழங்கிய பந்து கட்டளைகளை பின்பற்றி பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்களை ஒருங்கிணைத்து ஒரு கல்வி குடும்ப முக்கோணத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பயணித்து வருகிறேன். ஒரு சினிமா நடிகராக இல்லாமல், அப்துல் கலாமின் சீடராக இதை செய்து வருகிறேன்.

சமுதாயத்தை சீரழிப்பதில் சினிமா முக்கிய காரணமாக உள்ளதா?

உண்மைதான். இருப்பினும், சினிமாவால் வன்முறையும் வளர்ந்துள்ளது; அதேபோல், பக்தியும்கூட வளர்ந்துள்ளது. இப்போது, டிஜிட்டல் மீடியாவாலும் இந்த பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து மீள வைக்கும் பணியை தான் செய்து வருகிறோம்.

இளைஞர்கள் போதை பழக்கங்களுக்கு அடிமையாவது குறித்து...

முந்தைய காலத்திலும் கள், சாராயம் உள்ளிட்டவை இருந்தன. அன்று, பொழுதுபோக்காக இருந்தது, இன்று வியாபாரமாக மாறியதால் தான் இந்த அவலம். போதை பழக்கத்தால் வரவு, செலவு இரண்டும் உள்ளது. வரவு போதை என்றால், செலவு நோயாக இருக்கும். இதனால்தான் நோயற்ற வாழேவே குறைவற்ற செல்வம் என்று நம் முன்னோர் கூறினர்.

அன்று ஆசிரியர்களை பார்த்து மாணவர்கள் பயந்த காலம் மாறி, இன்று மாணவர்களே ஆசிரியர்களை தாக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறதே!

இது காலத்தின் கோலம். ஒவ்வொரு மாணவர்களுக்கு உள்ளும் ஒவ்வொரு மாற்றம் உண்டு. மாணவர்களை மாற்றக்கூடிய சூத்திரங்கள் உள்ளன.அவற்றை நாம் கையாள்வதில்லை. அப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படும்போது மாணவர் சமுதாயம் மாறும்.

பெற்றோர்களின் அலட்சியமும் காரணமா?

பெற்றோர்களும் முன்னாள் மாணவர்கள்தானே. அன்று, சாப்பிடாத குழந்தைகளை சாப்பிட வைக்க பொம்மை கொடுப்பார்கள். இன்று மொபைல் போன் தான் ஒரு கருவியாக உள்ளதால், இதை சிறு வயது முதலே பழக்கப்படுத்துகின்றனர். எனவே, குழந்தைகள் மொபைல் போனை சிறந்த நண்பனாக கருதுகின்றனர். மொபைலில் கல்வி மட்டுமல்ல; எத்தனையோ விஷயங்கள் உள்ளன.

மொபைல், போன், ஊடகங்கள், டிஜிட்டல் மீடியாக்கள் அதிகரித்ததால் தற்கொலைகள் குறைந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. எனவே, மொபைல் போன்களில் நல்லது, கெட்டது என, இரண்டும் உள்ளன. நாம் எதை பின்பற்ற வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்கிறோம். நாம் வீட்டில் ஒரு மாணவன் உள்ளான் என்ற எண்ணம் பெற்றோர்களுக்கு இருக்க வேண்டும்.

அடித்து கற்பித்த காலம் மாறிவிட்டதே!

ஆசிரியர்களிடம், மாணவர்கள் எப்போதும் பாராட்டைதான் எதிர்பார்ப்பார்கள். மாணவர்கள் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெறும்போதுதான் இது நடக்கும். படிக்காத மாணவர்களையும் ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி படிக்க வைப்பார்கள். மாணவர்களின் தன்மை மாறியதால், ஆசிரியர்களின் மன நிலையும் மாறிவிட்டது.

ஒரு ஆசிரியர், மாணவரை கண்டிக்கும்போது, பெற்றோர் தலையிட்டு ஆசிரியரை மிரட்டுகின்றனர். ஆசிரியர், பெற்றோரின் மதிப்பை புரிய வைக்க வேண்டிய கட்டாயம் இன்று உள்ளது. சுதந்திரமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடும்; கட்டுப்பாடுடன் இருக்க வேண்டிய மாணவர்களுக்கு சுதந்திரமும் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.

இந்தியா - -பாகிஸ்தான் போர் குறித்து...

இந்தியா வல்லரசு நாடு என்பதை நிரூபிக்க கூடிய காலகட்டம் வந்து விட்டது. அது நெருங்கி வரும்போது இதுபோன்ற விஷயங்கள் நடக்கும்.

Advertisement