செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…

பொதுவாக வீடு கட்டும் பணியில் எந்த வகை கற்களை பயன்படுத்த வேண்டும் என்பதில் முடிவு எடுப்பதில் பலருக்கும் குழப்பம் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் களிமண்ணை பயன்படுத்தி சூளைகளில் சுட்டு தயாரிக்கப்பட்ட செங்கல் மட்டுமே பிரதான பொருளாக இருந்த வரை, இதில் குழப்பம் ஏற்படவில்லை.

ஆனால், செங்கல் தயாரிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையில், அதற்கு மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்துள்ளது. குறிப்பாக, எரிசாம்பல் கற்கள், ஹாலோ பிளாக், சாலிட் பிளாக் போன்ற பல்வேறு கற்கள் வந்துள்ள நிலையில், எதை தேர்வு செய்வது என்பதில் மக்களிடம் குழப்பம் ஏற்படுகிறது.

எத்தனை வகையான புதிய பொருட்கள் வந்தாலும் சரி, அதனால் எவ்வளவு ரூபாய் செலவு மிச்சமாகும் என்று கூறப்பட்டாலும், செங்கற்களை மட்டுமே கட்டுமான பணிக்கு பயன்படுத்துவோம் என்று குறிப்பிட்ட மக்கள் இருக்கின்றனர். இதில், ஒரு பகுதி மக்கள் மாற்று பொருட்களையும் பயன்படுத்தி பார்க்கலாமே என்று முடிவு எடுக்கின்றனர்.

இவ்வாறு மாற்று பொருட்களை ஏற்கும் மக்கள் தேர்வு செய்வதிற்கான வாய்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளன. குறிப்பாக, வழக்கமான செங்கற்களுக்கு பதிலாக, ஹாலோ பிளாக், சாலிட் பிளாக் போன்ற கற்களை தேர்வு செய்யும் நிலையில், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்படுகிறது.

இது விஷயத்தில் செலவு என்ற அடிப்படையில் பார்த்தால், ஹாலோ பிளாக், சாலிட் பிளாக் ஆகியவற்றின் விலையை தனித்தனியாக பார்க்கும் போது சற்று அதிகமாக இருப்பது போன்று தெரியும். ஆனால், ஒட்டுமொத்தமாக செங்கற்கள் வாங்குவதற்கு ஆகும் செலவு அதை இணைக்க கலவை தயாரிக்கும் செலவு சேர்த்து பார்த்தால் வேறுபாடு தெரியும்.

செலவு என்ற அடிப்படைக்கு அப்பால், பயன்பாட்டு நிலையில் நீர்க்கசிவு போன்ற பல்வேறு பிரச்னைகளை சமாளிப்பதில் செங்கலுக்கு மாற்றாக வரும் புதிய பொருட்களால் அதிக பயன் கிடைக்கிறது.

கட்டடங்களில் தரை மட்டம் வரையிலான சுவர் எழுப்பும் இடத்தில் செங்கல் பயன்படுத்தும் போது ஈரத்தால் பாதிப்பு ஏற்படுவது எளிதாகிறது.

அதே நேரத்தில் ஹாலோ பிளாக், சாலிட் பிளாக் போன்ற கற்களை பயன்படுத்தும் போது ஈரத்தால் ஏற்படும் பாதிப்பு வெகுவாக குறைகிறது. எதார்த்த நடைமுறையில் உறுதி செய்யப்பட்ட இது போன்ற விஷயங்களை கருத்தில் வைத்து, வீடு கட்டுமான பணிக்கான கற்களை தேர்வு செய்ய வேண்டும்.

இதில் எரிசாம்பல் கற்கள் பெரும்பாலும் செங்கல் அளவிலேயே தயாரிக்கப்படுவதால் செயல்படும் தன்மையில் மட்டும் வேறுபடுகிறது.

ஆனால், ஹாலோ பிளாக், சாலிட் பிளாக் போன்ற கற்களை பயன்படுத்தும் நிலையில் அவற்றை ஒன்றுடன் ஒன்றை இணைக்கும் விஷயத்தில் மிக கவனமாக செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

Advertisement