அ.தி.மு.க., ஆட்சி அமைக்க உதவும் இளைஞர்களின் ஓட்டுகள்; ரத்ததான முகாமில் ஆர்வமுடன் பங்கேற்பால் உற்சாகம்

1


மதுரை : அ.தி.மு.க., சார்பில் நடந்த ரத்ததான முகாம்களில் பங்கேற்ற இளைஞர்களின் ஓட்டுகள் அடுத்தாண்டு அ.தி.மு.க., ஆட்சி அமைய உதவும் என நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் தகவல் தொழில்நுட்பப்பிரிவு ஏற்பாட்டில் நேற்று நகர், புறநகர் கிழக்கு மாவட்டம் மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.

நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா, ஐ.டி., பிரிவு மாநில செயலாளர் ராஜ்சத்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செல்லுார் ராஜூ கூறுகையில், ''இம்முகாமில் இளைஞர்கள் ஆர்வமுடன் ரத்ததானம் செய்தனர். இதை கண்டு ஆளுங்கட்சியே மிரண்டு உள்ளது. தி.மு.க., கூட்டத்தில் பீர் பாட்டில் வைத்து அழைப்பார்கள். நாங்கள் மக்கள் பயன்பெறும் வகையில் ரத்ததானம் எனக்கூறி அழைக்கிறோம். இளைஞர்கள் அதிகம் வருகிறார்கள்,'' என்றார்.

தமிழக அளவில் 82 மாவட்டங்களில் இதற்கான ஏற்பாடுகளை செய்த ஐ.டி., பிரிவு மாநில செயலாளர் ராஜ்சத்யன் கூறுகையில், ''மே 11 முதல் நடந்த இம்முகாம்களில் 40 ஆயிரம் பேர் வரை ரத்ததானம் செய்தனர். இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இளைஞர்கள். மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் இளைஞர்களின் வழிகாட்டியாக முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளார்,'' என்றார்.

நிர்வாகிகள் கூறியதாவது:



நாம் தமிழர் கட்சிக்கும், த.வெ.க.,வுக்கும் இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து வருவதாக ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. அது தவறு என்பதை மே 11, 13, 17ல் நடந்த ரத்ததான முகாம்கள் உணர்த்தின. நாங்களே எதிர்பார்க்காத வகையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வமுடன் ரத்ததானம் செய்தனர்.

அவர்களுக்கு சான்றிதழ்,மெடல் வழங்கி கவுரவித்தோம். 40 சதவீத இளைஞர்களின் ஓட்டுகளை முழுமையாக பெற வேண்டும் என பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

அதற்கேற்ப இதுபோன்ற முகாம்களை நடத்தி இளைஞர்களிடம் தி.மு.க., அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை கூறி வருகிறோம். இதுவும் ஒருவகையான பிரசாரம்தான் என்றனர்.

Advertisement