தேர்வில் வென்ற மாணவியருக்கு உயர்கல்விக்கான ஆலோசனை

தண்டையார்பேட்டை:கடமை கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவியருக்கு, உயர் கல்விக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கும் வழிகாட்டி நிகழ்ச்சி, நேற்று தண்டையார்பேட்டையில் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வருமான வரி துறை கமிஷனர் நந்தகுமார், மாணவியர் மத்தியில் பேசியதாவது:

நல்ல கல்லுாரியில் இந்த துறை கிடைக்காததால், என்னால் படித்து சாதிக்க முடியவில்லை. இந்த துறையில் படித்தால் தான் என்னால் சாதித்திருக்க முடியும் என்று சொல்வதை விட்டுவிடுங்கள். எந்த துறை கிடைத்ததோ, அதில் நன்றாக படித்து வெற்றியாளராக மாறுங்கள். எதையும் ஒதுக்காதீர்கள்.

என்ன படிக்கப் போகிறோம் என்பதை தீர்மானித்து, இலக்கை நோக்கி நம் பயணம் இருக்க வேண்டும்.

நம்மை பற்றி நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நமக்காக பாடுபட்ட பெற்றோருக்கு நாம் கொடுக்கும் மரியாதை, நாம் வாழ்வில் வெற்றி பெற்று சாதிப்பதே.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement