மீட்ட நிலத்தை யாருக்கும் ஒதுக்கக்கூடாது அறநிலைய துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை:'கொளத்துாரில், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்ட கோவில் நிலத்தை, யாருக்கும் ஒதுக்கக்கூடாது' என, அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கொளத்துாரைச் சேர்ந்த சரளா என்பவர் தாக்கல் செய்த மனு:

கொளத்துார், அன்னை சத்யா நகரில், 1999ம் ஆண்டு முதல் கோழிக்கடை வைத்துள்ளேன். என்னைபோல் 100 பேர் இங்கு, வீடு, கடை கட்டியுள்ளனர்.

இந்த நிலம் கொளத்துாரில் உள்ள சோமநாதசாமி கோவிலுக்கு சொந்தமானது எனக்கூறி, அறநிலையத் துறை அதிகாரிகள் 'நோட்டீஸ்' கொடுத்தனர்.

உரிய வாடகை தருவதாக கூறியும், இடத்தை காலி செய்ய சொல்வதால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

இதன் விசாரணையில், விதிகளை பின்பற்றி, அனைத்து நடவடிக்கைகளையும் சட்டப்படி மேற்கொள்ள வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, அறநிலையத்துறை கமிஷனரிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு நிலுவையில் உள்ள நிலையில், 100 காவலர்களுடன் வந்து, கடை மற்றும் வீடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள் இடித்து தள்ளினர். இந்த நிலத்தில் ஒருங்கிணைந்த காவல் நிலையம் கட்ட உள்ளதாக தெரிவித்தனர்.

எனவே, மேல்முறையீட்டு மனு விசாரணை முடியும் வரை, என் கடை இருந்த நிலத்தை அறநிலையத் துறை கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மனு, நீதிபதி வி.லட்சுமிநாராணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 'எந்த ஒரு விதிகளையும் பின்பற்றாமல், பொக்லைன் இயந்திரத்தால் கட்டடத்தை அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்' என்றார்.

இதை கேட்டு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

பொக்லைன் இயந்திரத்தை இதுபோல பயன்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அதிகாரிகளுக்கு தெரியாதா?

மே மாதம், அடிக்கும் வெயிலில், வீட்டை இழந்தவர்கள் எங்கு போவார்கள்? இந்த நிலத்தை வேறு யாருக்கும் அறநிலையத்துறை வழங்கக்கூடாது. தற்போதைய நிலையே தொடர வேண்டும்.

இவ்வாறு இடைக்கால உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

Advertisement