குறைந்த மின்னழுத்த பிரச்னையை சரிசெய்ய நடவடிக்கை: சிவசங்கர்

2

சென்னை: “குறைந்த மின்னழுத்த பிரச்னையை சரிசெய்ய, பழைய டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைப்பது உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன,” என, மின் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

சென்னை மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள, 'மின்னகம்' நுகர்வோர் சேவை மையத்தில் பெறப்படும் புகார்கள் தொடர்பாக, அமைச்சர் சிவசங்கரன் நேற்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மின் வினியோகம் தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில், மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின், சிவசங்கர் கூறியதாவது:

மின்னகம் சேவை மையத்தில், பணியாளர்கள் எண்ணிக்கை, 'ஷிப்ட்'டுக்கு 65ல் இருந்து 94 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தினமும் சராசரியாக, 2,500 - 3,000 புகார்கள் பெறப்படுகின்றன. அவற்றின் மீது, விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தமிழகம் முழுதும் கோடை மழை, சூறைக்காற்று வீசுவதால், மின் கம்பங்கள் சேதமடைகின்றன.

அவை, போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்படுகின்றன. சில இடங்களில் குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்படுகிறது.

அதை சரிசெய்ய, பழைய டிரான்ஸ்பார்மர் மாற்றி அமைப்பது, துணை மின் நிலையங்களின் திறனை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து எடுக்கப்படுகின்றன.

கோடை மின் தேவை, கடந்த ஆண்டை விட இந்தாண்டில் குறைவாக உள்ளது. கோடை மழை பெய்வதுடன், காற்றாலை மின் உற்பத்தி துவங்கியுள்ளதால், இந்த கோடை மின் தேவை எளிதாக பூர்த்தி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement