கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு கட் ; வெப்பத்தால் 14,000 கோழிகள் பலி

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பி.திருவேங்கடபுரத்தில் கோழிப்பண்ணைக்கு மின் கட்டணம் செலுத்தாததால் மின் துறையினர் இணைப்பை துண்டித்தனர். இதனால் 'ஏசி' செயல்படாமல் ஏற்பட்ட வெப்பத்தால் 14,000 கோழிகள் பரிதாபமாக பலியாயின.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பி.திருவேங்கடபுரத்தில் ராஜபாளையம் அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த செல்லமுத்துபாண்டியன் 3 ஆண்டுகளாக குளிரூட்டப்பட்ட கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். 15,000 கோழிகள் வளர்த்து வந்தார். இவர் மின்கட்டணம் ரூ.26,765 நிலுவை வைத்திருந்தார். அத்துடன் கடந்த மாதத்திற்கான மின் கட்டணம் ரூ. 22,233 தொகையை செலுத்த மே 20 வரை அவகாசம் இருந்தது.
நேற்று கடந்த மாதத்திற்கான மின் கட்டண தொகையை செலுத்த கல்லமநாயக்கன்பட்டி மின்வாரிய அலுவலகம் சென்றபோது ஏற்கனவே நிலுவையில் உள்ள தொகையையும் சேர்த்து செலுத்த மின்வாரிய ஊழியர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து கூடுதல் பணத்தை தயார் செய்து மொத்த மின் கட்டண தொகையான 49,719 ரூபாயை செலுத்தியுள்ளார்.
மின் கட்டணத்தை செலுத்தி விட்டு கோழி பண்ணைக்கு சென்றார். ஆனால் மின்வாரியத்தினர் மின்சாரத்தை அதற்கு முன்பே துண்டித்ததால் கோழிப்பண்ணையில் இருந்த 'ஏசி' செயல்படாமல் வெப்பம் தாங்காமல் 14 ஆயிரம் கோழிகள் ஒன்றன்பின் ஒன்றாக செத்து மடிந்தன. செல்லமுத்துபாண்டியன் மின் அதிகாரிகள் மீது மாரனேரி போலீசில் புகார் செய்தார்.
மின்வாரிய செயற் பொறியாளர் முத்துராஜ் கூறியதாவது:
நிலுவை மின் கட்டணத்தை செலுத்துவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து அவரிடம் மின் கட்டணத்தை செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், அலுவலர்கள் நேரடியாக அவரிடம் சென்று பணத்தை கட்டும்படி வலியுறுத்தினர்.
ஆனால் அவர் பணத்தை செலுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து நேற்று கோழிப்பண்ணையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அதன் பின்னரே அவர் பணத்தை செலுத்தினார். தொடர்ந்து 30 நிமிடங்களில் மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டது என்றார்.
மேலும்
-
சென்னை ரயில்வே ஸ்டேஷனில் கணக்கில் வராத ரூ.38 லட்சம் பறிமுதல்
-
கலிபோர்னியாவில் வெடிகுண்டு தாக்குதல்; ஒருவர் பலி
-
ஹைதராபாத்தில் மூன்று மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: 10 பேர் பரிதாப பலி
-
மெக்சிகோ கடற்படை கப்பல் விபத்தில் சிக்கியது; 22 பேர் காயம்
-
பின்லாந்தில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 5 பேர் பரிதாப பலி!
-
முதிய தம்பதி படுகொலை; ஈரோட்டில் மூவர் சிக்கினர்!