புறாக்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரே மருத்துவமனை

நாட்டிலேயே புறாக்களுக்காக 27 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் ஒரே மருத்துவமனை, பெங்களூரு ராஜாஜிநகரில் அமைந்து உள்ளது.
இது பற்றி விசாரிக்க அங்கு சென்றிருந்த போது, அட்டை பெட்டியுடன் பதற்றத்துடன் ஒருவர் வந்தார். அட்டை பெட்டியில் வைத்திருந்த அடிப்பட்ட புறாவை வெளியே எடுத்தார். அங்கிருந்த ஊழியர்கள், இது போன்று அடிபட்ட புறாவுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
புறாக்களுக்கு பாதிப்பு, அடிபட்டால், ராஜாஜி நகரில் உள்ள இம்மருத்துவமனைக்கு தான் பெரும்பாலானோர் கொண்டு வருகின்றனர்.
இது குறித்து, ஸ்ரீ சங்கேஸ்வர் பர்ஷ்வந்த் ஜெயின் கபாடர் தானா சேவா சமிதி பொருளாளர் வசந்தராஜ் ரங்கா கூறியதாவது:
என் தந்தை புக்ராஜ் ரங்கா, அவரது நண்பர் பன்னாலால் ஆகியோர் புறாக்கள் மீது பாசம் கொண்டவர்கள். தினமும் அவைகளுக்காக உணவு அளித்து வந்தனர். இதற்காக இவைகளுக்கு உணவு அளிக்க வேண்டும் என்பதற்காகவே, 1998ல் 23 உறுப்பினர்கள் கொண்ட சமிதி துவக்கப்பட்டது.
ரூ.50 லட்சம் செலவு
கடந்த 27 ஆண்டுகளாக தினமும் 50 கிலோ கொண்ட 15 மூட்டை தானியங்கள் அளித்து வருகிறோம். இதற்காக ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் செலவழிக்கிறோம். நன்கொடை மூலமாகவே பணத்தை பெறுகிறோம்; இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நன்கொடை வேண்டும் என்று யாரிடமும் கேட்டதில்லை.
தினமும் கப்பன் பூங்கா, சுதந்திர பூங்கா, சாங்கே ஏரி, தேவய்யா பூங்கா, நேதாஜி பூங்காக்களில் புறாக்களுக்கு தானியங்கள் வழங்கி வருகிறோம்.
காயமடையும் புறாக்களுக்கு சிகிச்சை அளிக்க 20-18ல் இங்கு மருத்துவமனையை துவக்கினோம். இத்திட்டத்துக்கு பெங்களூரு நகர மக்களிடம் இருந்து அமோக ஆதரவு கிடைத்தது.
அடிபட்ட புறாவை மீட்டவர்கள், பத்திரமாக எங்களிடம் கொண்டு வருவர். சிலர் 'டன்ஜோ' என்ற செயலி மூலம் அனுப்புவர் அல்லது அவர்களே நேரில் வருவர். அதன் பின், அத்தகைய புறாக்களை, நாங்கள் பார்த்து கொள்வோம்.
700 புறாக்கள் வளர்ப்பு
எங்கள் மருத்துவமனையில் தற்போது 700 புறாக்கள் வளர்த்து வருகிறோம். தினமும் 30 முதல் 40 புறாக்கள் சிகிச்சைக்கு கொண்டு வரப்படுகின்றன. பெரும்பாலான புறாக்கள் நோயால் பாதிக்கப்பட்டும், தொற்று அல்லது கால்கள், சிறகுகள் அறுந்தும் வருகின்றன.
சிறகுகள் அறுந்த புறாக்களால் பறக்க முடியாது என்பதால், நாங்களே அதனை வாழ்நாள் முழுதும் பராமரிக்கிறோம்.
குணமடைந்த புறாக்கள், நகரின் பல பகுதிகளில் விடப்படுகின்றன. சில புறாக்கள் மீண்டும் மருத்துவமனைக்கே வந்து விடுகின்றன. புறாக்களை கவனித்து கொள்ள, ஆறு ஊழியர்கள் முழு நேர பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். புறாக்களுக்கு சிகிச்சை அனைத்தும் இலவசம்.
புறாக்களுக்கு அடிபட்டால், என் 98452 21309 என்ற மொபைல் போன் நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.
மேலும்
-
சென்னை ரயில்வே ஸ்டேஷனில் கணக்கில் வராத ரூ.38 லட்சம் பறிமுதல்
-
கலிபோர்னியாவில் வெடிகுண்டு தாக்குதல்; ஒருவர் பலி
-
ஹைதராபாத்தில் மூன்று மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பரிதாப பலி
-
மெக்சிகோ கடற்படை கப்பல் விபத்தில் சிக்கியது; 19 பேர் காயம்
-
பின்லாந்தில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 5 பேர் பரிதாப பலி!
-
முதிய தம்பதி படுகொலை; ஈரோட்டில் மூவர் சிக்கினர்!