வங்கதேசத்திற்கு இனிமேல் கஷ்ட காலம்: சொல்கிறார் முன்னாள் தூதர்

புதுடில்லி: தற்போதுள்ள சூழ்நிலையில், வேறு நாடுகளில் சந்தையை பிடிப்பதற்கு வங்கதேசத்திற்கு இனிமேல் கடினமாக தான்இருக்கும் என அந்நாட்டிற்கான இந்தியத் தூதர் கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்ற பிறகு, இந்தியாவிற்கு எதிரான போக்கு காணப்படுகிறது. குறிப்பிட்ட சில வகை இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு வங்கதேசம் கடந்த மாதம் தடை விதித்தது. இதனையடுத்து அந்நாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆயத்த ஆடைகள், உள்ளிட்ட குறிப்பிட்ட சில பொருட்களை வங்கதேசத்தில் இருந்து தரைவழியாக இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன்படி, நவி மும்பை, நவ ஷேவா துறைமுகம் மற்றும் கொல்கட்டா துறைமுகம் வாயிலாக மட்டுமே இனி வங்கதேசத்திலிருந்து ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்ய முடியும். ஆனால், தரை வழியாக இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள், பருத்தி, நெகிழி, மரச்சாமான்கள் ஆகியவற்றின் தரைவழி இறக்குமதிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன், சமையல் எண்ணெய், ஜல்லி கற்கள் ஆகிய பொருட்களுக்கு தரைவழி இறக்குமதிக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை.
இது தொடர்பாக வங்கதேசத்திற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் வீணா சிக்ரி கூறியதாவது: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா பிரதமர் ஆக இருந்த போது, வங்கதேச பொருட்களுக்கு இந்தியாவில் முழு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. புகையிலை மற்றும் ஆல்கஹால் தவிர மற்ற பொருட்கள் சந்தைகளை எளிதாக அணுக வாய்ப்பு இருந்தது. இரண்டு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏதும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.ஆனால், கடந்த 8 மாதங்களாக, ஷேக் ஹசீனா சட்டவிரோதமாக பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசில், இந்தியா - வங்கதேசம் இடையேயான பொருட்கள் நடமாட்டத்திற்கு தன்னிச்சையாக கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.
இந்தியாவை மட்டும் நம்பியிருக்கவில்லை என காட்ட முயல்கின்றனர். அந்த பொருட்களை துருக்கி, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முயற்சி செய்கின்றனர்.வங்கதேசம் தன்னிச்சையாக செயல்பட்டாலும், இந்தியா கொஞ்சம் பொறுமை காத்தது. இந்தியா வங்கதேசம் இடையிலான வர்த்தகத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தியா பதிலடி நடவடிக்கை எடுக்க துவங்கி உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில், வேறு நாடுகளில் சந்தையை பிடிப்பதற்கு வங்கதேசத்திற்கு இனிமேல் கடினமாக தான்இ ருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
கந்தசுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
-
செங்கல்பட்டு சந்தை காய்கறி விலை நிலவரம்
-
கோவில் உண்டியல் உடைக்க முயற்சித்த மூன்று பேர் கைது
-
நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
-
துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் நடமாடியதாக வதந்தியால் பீதி
-
புதுச்சத்திரம் பகுதியில் கொட்டிய கனமழை மாவட்டத்தில் ஒரே நாளில் 432.90 மி.மீ., பதிவு