கோவில் உண்டியல் உடைக்க முயற்சித்த மூன்று பேர் கைது

திருப்போரூர்:திருப்போரூர் அருகே, தண்டலம் ஊராட்சியில் அடங்கிய மேட்டுத்தண்டலம் கிராமத்தில், அய்யப்பன் கோவில் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, கோவில் அர்ச்சகர் பூஜைகளை முடித்துவிட்டு, கோவிலை பூட்டிவிட்டு, அருகே உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், நள்ளிரவு 12:30 மணியளவில், கோவில் அருகே நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது.

இதனால், அருகே வசிக்கும் கோவில் நிர்வாகி மகேஷ் சந்தேகமடைந்து, தன் மொபைல்போனில் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.

அப்போது, மர்ம நபர்கள் மூன்று பேர் 'பைக்'கில் கோவிலை சுற்றி சுற்றி வருவதும், பின், கோவில் சுற்றுச்சுவரில் ஏறி கோவில் வளாகத்திற்கு உள்ளே இறங்குவதும், உண்டியலை உடைக்கும் முயற்சியில் ஈடுபடுவதும் தெரிந்தது.

உடனே அவர், சக நண்பர்கள், கோவிலின் மற்ற நிர்வாகிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.

பின், 20க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்து, கொள்ளையடிக்க முயற்சித்த மூவரையும் சுற்றி வளைத்து பிடித்து, திருப்போரூர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இவர்கள் அவர்கள் பொன்னேரியைச் சேர்ந்த முத்து, 24, திருவள்ளூர் அடுத்த மோரை கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன்,24, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தான்பூண்டியைச் சேர்ந்த மணிகண்டன், 28, என தெரிந்தது.

புகாரின்படி, திருப்போரூர் போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்து, திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement