சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் பாதசாரிகளுக்கு விபத்து அபாயம்

திருவள்ளூர்:திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில், கலெக்டர் அலுவலகம் அருகில் 'டோல்கேட்' சாலை சந்திப்பு உள்ளது. ஊத்துக்கோட்டை - மருத்துவக் கல்லுாரி பிரியும் இச்சாலை சந்திப்பு அருகில் இருந்து, திருத்தணி செல்லும் வழியில் சாலையின் இடதுபுறம் 10க்கும் மேற்பட்ட உணவகம், பழக்கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
தற்காலிகமாக, ஓலை கொட்டகை அமைத்து கடைகள் இயங்கி வருகின்றன. மேலும், ஒரு சில இடத்தில், இரும்பு தகடு அமைப்புடன் கூடிய கடைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
இக்கடைகளுக்கு வருவோர், தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி, பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
இதனால், திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் வாகனங்கள், சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால், அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கிறது. இதனால், விபத்து அபாயம் ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், தற்காலிக கடைகளில் விற்பனை அதிகரிக்கும் பட்சத்தில், நிரந்தர கடைகளாக மாறும் அபாயமும் உள்ளது. அவ்வாறு நிரந்தர கடைகள் அமைப்பதற்குள், நெடுஞ்சாலைத் துறையினர் சுதாரித்து, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.