வனப்பகுதியில் கம்பி வேலிகள் சேதம் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்

சோழவரம்:சோழவரம் அடுத்த ஆத்துார் பகுதியில் இருந்து பழைய மற்றும் புதிய எருமைவெட்டிப்பாளையம் கிராமங்களுக்கு செல்லும் சாலையின் இருபுறமும் வனப்பகுதி அமைந்துள்ளது.
இந்த வனப்பகுதிக்குள் மயில், மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் உள்ளன.
இவை, இரவு நேரங்களில் சாலையை கடக்கும்போது, வாகனங்களில் சிக்காமல் இருக்கவும், வாகன ஓட்டிகள் அவற்றின் மீது மோதி விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கவும், வனத்துறையால் இருபுறமும் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டன.
இதற்காக, இருபுறமும் 1,200க்கும் அதிகமான சிமென்ட் கம்பங்கள் பதித்து, அதில் இரும்பு வலைகளை பொருத்தி வேலி உருவாக்கப்பட்டது.
தற்போது அவை, ஆங்காங்கே சேதமடைந்து உள்ளன. கம்பங்கள் உடைந்தும், கம்பி வேலிகள் கீழே விழுந்தும் கிடக்கின்றன.
இதனால், வேலிகள் இல்லாத பகுதிகள் வழியாக வன உயிரினங்கள் சாலையை கடந்து சுற்றித்திரிவதாக கூறப்படுகிறது.
வனப்பகுதியில் கம்பி வேலிகள் சேதமடைந்து இருப்பதால், வன உயிரினங்கள் மற்றும் வாகன ஒட்டிகள் அசம்பாவிதங்களில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, வனத்துறையினர் அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.