வீட்டுத்தோட்டம் அமைக்க அருகில் வசிப்பவர்களை ஊக்குவிப்பது மகிழ்ச்சி; தேனியில் அசத்தும் மூத்த தம்பதி

இன்றைய சூழலில் தங்கள் வீட்டில் தொட்டிகளில் மூலிகை, பூச்செடிகளை வளர்ப்பதுடன் அருகில் வசிப்பவர்களையும் காய்கறிச் செடிகள் பராமரிக்க ஊக்கப்படுத்தி, நுணுக்கங்களை கற்றுக்கொடுத்து வருகின்றனர் தேனி பழைய ஜி.எச்.,ரோடு ராமானுஜர் தெருவில் வசிக்கும் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சால், அவரது மனைவி மகரதம் தம்பதி.

நகர் பகுதிகளில் இல்லத்தரசிகள் இயற்கையாக காய்கறிகள், பழங்கள், மூலிகை செடிகள், கீரைகளை வீட்டில் உள்ள சிறிய இடங்களில் உற்பத்தி செய்ய துவங்கி உள்ளனர். இதற்காக பலரும் பிளாஸ்டிக் தொட்டிகள், உடைந்த குடங்களில் தோட்டங்களில் இருந்து மண் எடுத்து வந்து மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைக்கின்றனர். மாடித்தோட்ட பராமரிப்பு, தாவர வளர்ச்சிக்கு தேவையான மூலப்பொருட்களை சமையலுக்கு வாங்கும் காய்கறிகளில் இருந்தே எடுத்துக் கொள்கின்றனர். உதாரணமாக முட்டைக்கோஸ் அடிப்பகுதியை நடவு செய்து மீண்டும் முட்டைகோஸ் உற்பத்தி செய்தல், புதினா, கீரை வகைகள், தக்காளி, கத்தரி உள்ளிட்டவற்றிற்கு மீதமாகும் காய்கறிகளில் இருந்து விதைகள் எடுத்துக் கொள்கின்றனர். இதுதவிர மருத்துவ குணம் கொண்ட பிரண்டை, கற்றாழை போன்றவற்றை நகர் பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.

ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் பிச்சால் வீட்டின் முன்புறம் சுமார் 18 க்கும் மேற்பட்ட தொட்டிகளில் கீழாநெல்லி, துாதுவளை, துளசி, ஒமவல்லி, புதினா, மல்லிகை, அடுக்குமல்லி, பல்வேறு ரோஜாக்கள், வெற்றிலை, கற்றாழை, கறிவேப்பிலை செடிகளை பராமரித்து வருகின்றனர். கோடையை தவிர்த்து மற்ற நாட்களில் வீட்டிற்கு தேவையான, காய்கறிகளையும் தொட்டிகளில் வளர்த்துள்ளனர்.

ஊக்குவிப்பது மகிழ்ச்சி



மரகதம், பழைய ஜி.ஹெச். ரோடு, தேனி : நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். அதனால் விவசாய பணிகளில் சிறு வயதில் இருந்தே ஈடுபாடு அதிகம். தற்போது நகர் பகுதியில் வசித்தாலும் மாடியில் தொட்டிகளில் காய்கறிகள், மூலிகை, பூச்செடிகள் வளர்த்தேன். தற்போது மாடியில் வீடு அமைத்ததால் தொட்டிகளை வீட்டின் முன் வைத்து செடிகளை பராமரிக்கிறேன். தினமும் காலையில் செடிகளுக்கு தண்ணீர் தெளித்து, ஏதேனும் பூச்சி, நோய் தாக்குதல் உள்ளதா என கவனிப்பேன். மழை காலம் தவிர மற்ற நேரத்தில் வெள்ளை பூச்சி தாக்குதல் காணப்படும். இந்த தொட்டிகளில் வளரும் துாதுவளை, துளசி, புதினா உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி மூலிகை டீ தயாரித்து வீட்டில் உள்ளவர்கள் பருகுவோம். இதனால் இருமல், காய்ச்சல், சளி தாக்குதல்களால் பாதிப்படைவது குறைவு. செடிகள் பராமரிப்பு பற்றி அருகில் உள்ளவர்கள் கேட்பார்கள். அவர்களுக்கும் பராமரிப்பு பற்றிய நுணுக்கங்களை சொல்லி கொடுப்பேன். தெருவில் பலரும் தொட்டிகளில் செடி வளர்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது., என்றார்.

இயற்கை உரம்



பிச்சால், ஓய்வு இன்ஸ்பெக்டர், தேனி : பூதிப்புரம் அருகே உள்ள கிராமங்களுக்கு சென்று ஆட்டு எரு வாங்கி வருவேன். காயவைத்து அரைத்து கொள்வோம். பின் செடிகளுக்கு உரங்களாக பயன்படுத்துகிறோம். மேலும் வீட்டில் காய்கறிகள் கழுவும் தண்ணீர், முட்டை ஓடு உள்ளிட்டவற்றை உரமாக பயன்படுத்துகிறோம். ஊர்களுக்கு சென்று வரும் போது ஆங்காங்கே வளர்ந்துள்ள செடிகளை கொண்டு வந்து நடவு செய்து பராமரிப்பது மகிழ்ச்சியாக உள்ளது., என்றார்.

Advertisement