ஹோட்டலில் பரிமாறப்பட்ட பிரசாதம்: ஒடிஷாவில் பக்தர்கள் ஆவேசம்

1

புரி: சர்வதேச அளவில் புகழ்பெற்ற புரி ஜெகன்னாதர் கோவில் பிரசாதத்தை, ஒடிஷாவின் கடற்கரையோர ரிசார்ட்டில், சாப்பாட்டுடன் பரிமாறப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிஷாவில், முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் புரியில் கி.பி., 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மிகப் பிரபலமான புரி ஜெகன்னாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடவுள் ஜெகன்னாதருக்கு படைக்கப்பட்ட 'மஹா பிரசாதத்தை' பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர்.

மிகுந்த பக்தி மற்றும் மரியாதை காரணமாக, மஹா பிரசாதத்தை தரையில் அமர்ந்தபடி சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில், ஒடிஷாவின் புரி கடற்கரையோரம் அமைந்துள்ள 'ரிசார்ட்' எனப்படும் தங்கும் விடுதியுடன் கூடிய ஹோட்டல் ஒன்றில், 'மஹா பிரசாதம்' வினியோகிக்கப்பட்டது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், டைனிங் டேபிளை சுற்றிலும் ஒரு குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உட்பட 10 பேர் இருக்கைகளில் அமர்ந்துள்ளனர்.

அவர்களுக்கு புரி ஜெகன்னாதர் கோவில் மஹா பிரசாதத்தை அர்ச்சகர் ஒருவர், சாப்பாட்டுடன் பரிமாறுகிறார். அப்போது ஒருவர், அர்ச்சகரிடம், இதுபோன்று செய்வது ஏன் என கேள்வி எழுப்பியதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது தொடர்பாக, ஜெகன்னாதர் கோவில் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், 'இறைவனின் தெய்வீக மஹா பிரசாதமானது, அன்ன பிரம்மாவின் வடிவமாக வழிபடப்படுகிறது.

'இந்த பிரசாதத்தை தரையில் அமர்ந்து தான், சாப்பிட வேண்டும் என்ற பாரம்பரிய நடைமுறை, பழங்காலத்தில் இருந்தே பின்பற்றப்படுகிறது.எனவே, யாராக இருந்தாலும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தபடி மஹா பிரசாதத்தை சாப்பிடும் செயல்களை தவிர்க்க வேண்டும்.

'பக்தர்களின் உணர்வுகள், மத நம்பிக்கையை கருதி, புரியில் உள்ள ஹோட்டல்கள், தங்கள் விருந்தினர்களிடம் இதுபோன்று செய்யக் கூடாது என அறிவுறுத்த வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

Advertisement