பசுமை சாம்பியன் விருதுக்கு தேர்வு முகாம்

கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சியில், தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு முகாம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முழுமையாக அர்ப்பணித்த தனி நபர் அல்லது அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பித்த தனிநபர் மற்றும் அமைப்புகளை தேர்வு செய்வதற்கான தேர்வு முகாம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. தேர்வுக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

விருதுக்கு விண்ணப்பித்த தனி நபர் மற்றும் அமைப்புகள் மாவட்டத்தில் மேற்கொண்ட மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடுதல், மஞ்சள் பை விழிப்புணர்வு, மரம் வளர்ப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து தனித்தனியாக எடுத்துரைத்தனர்.

மேலும் இத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும், 2 பேர் அல்லது அமைப்புகளுக்கு உலக சுற்றுச்சூழல் தினமான, ஜூன் 5ம் தேதி பசுமை சாம்பியன் விருது மற்றும் தலா 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளது.

கூட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜேந்திரன், வன அலுவலர் ராஜா, சி.இ.ஓ., கார்த்திகா, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement