அரிமதி தென்னகனார் சிறார் விருதுகள் வழங்கல்

புதுச்சேரி: புதுச்சேரி இளைஞர் அமைதி மையம் சார்பில் கலை, கல்வி, இலக்கியம், விளையாட்டு மற்றும் சமூகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கான 'அரிமதி தென்னகனார் சிறார் விருதுகள்' வழங்கும் விழா நடந்தது.

விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி வரவேற்றார். தாசில்தார் செந்தில்குமார், ராமகிருஷ்ணா சேவா சங்கத்தின் துணைத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார்.

விழாவில் செல்வகணபதி எம்.பி., பங்கேற்று, ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியை சேர்ந்த தென்றல், அமலோற்பவம் லுார்து அகாடமி மோனாலிவிந்ரா, கயல்விருக் ஷா, நித்திஷ்வரன், நிஷாந்தினி, ஸ்ரீசங்கரா வித்யாலயா பள்ளி வைஷ்ணவி, செயின்ட் ஜோசப் குளுனி பள்ளி பிரித்திகாதேவி, டான்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி ஜோவிதா, ப்ளூ ஸ்டார்ஸ் மேல்நிலைப் பள்ளி சோஹைல் பர்வேஜ் பிரணவ்தர்ஷன் ஆகியோருக்கு சிறார் விருதுகள் வழங்கினார்.

அவர் பேசுகையில், 'குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியத்தை வைத்தே அந்நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. சவால்கள் நிரம்பிய உலகில் குழந்தைகள் தன்னம்பிக்கையோடும், பொறுப்புணர்வோடும், துணிவோடும் வாழ பெற்றோர்கள் வழிகாட்ட வேண்டும்.

மது, போதை, திரை கவர்ச்சி மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற நுகர்ச்சிக் கலாச்சாரங்களிலுள்ள ஆபத்துக்களை உணர்ந்து குழந்தைகளை ஒழுக்கம், தன்னம்பிக்கை உள்ளவர்களாக உருவாக்குவது பெற்றோர்களின் கடமை. குழந்தைகள் வளர்ந்த பின், பெற்றோர்களை கை விடாமல் பாதுகாக்க வேண்டும்' என்றார். அரிமதி இளவேங்கை நன்றி கூறினார்.

Advertisement