அ.தி.மு.க., -பா.ஜ., கூட்டணி: திருமாவளவன் சொல்வது இதுதான்!

32


திருச்சி: ''அ.தி.மு.க., வும், பா.ஜ.,வும் சேர்ந்து தேர்தலை சந்திப்போம் என்று அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் அது தொடருமா என்று தெரியாது.'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை, இந்த நிமிடம் வரை தி.மு.க., தலைமையிலான கூட்டணி தான், கூட்டணி என்கிற வடிவத்தோடு இருக்கிறது. எதிர்க்கட்சிகள் இன்னும் ஒரு கூட்டணி என்கிற, வடிவத்தையே எட்டவில்லை. அ.தி.மு.க., வும், பா.ஜ.,வும் சேர்ந்து தேர்தலை சந்திப்போம் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

தொடருமா!



ஆனால் அது தொடருமா என்று தெரியாது. அதே கூட்டணியில் இடம்பெற்று இருந்த பா.ம.க., இன்னும் அது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. அவர்கள் எந்த அணியில் இருக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தே.மு.தி.க., என்ன செய்யும் என்று யாருக்கும் தெரியாது. ஆகவே அவர்கள் இன்னும் கூட்டணியாக வடிவம் பெறவில்லை என்பது தான் எதார்த்தமான உண்மை.

நம்புகிறேன்



விஜய்க்கு அ.தி.மு.க., அழைப்பு விடுப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. அவர் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுப்பாரா, அ.தி.மு.க., தலைமையை ஏற்றுக்கொண்டு அவரும் அந்த கூட்டணியில் பங்குதாரர் ஆக போவாரா? அல்லது என்னுடைய தலைமையில் நீங்கள் எல்லாம் வாருங்கள் என்று சொல்வாரா என்று தெரியவில்லை. இந்த தேர்தலில் தி.மு.க., கூட்டணி தான் மீண்டும் மக்களின் செல்வாக்குடன் ஆட்சியை கைப்பற்றும் என்று பெரிதும் நம்புகிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement