உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும்; முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் என்று பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.



இதுகுறித்து அவரது அறிக்கை;


ஈரோடு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் அரசு கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 10,000த்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் வேதனையளிக்கின்றன. வேகாத வெயிலில் சளைக்காமல் பாடுபடும் நமது விவசாயிகளின் மொத்த உழைப்பையும் இப்படி அலட்சியப்படுத்தி வீணாக்குவது தான் திராவிட மாடலா?


இப்படி, ஒரு பருவ மழைக்கே பழுதடைந்து உணவுப் பொருட்கள் பாழாய் போகும் லட்சணத்தில் இயங்கும் அரசு உணவு சேமிப்பு கிடங்குகளை வைத்துக் கொண்டு, தமிழக அரசு இந்த வருடத்தின் வேளாண் பட்ஜெட்டில் உணவு சேமிப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை கடந்த வருடத்தை விட 50% குறைத்தது ஏன்? தனது ஆட்சிக் காலம் முடிவதற்குள் தமிழகத்தின் முதுகெலும்பை நொறுக்கும் நோக்கமா?


தி.மு.க., அரசு உழவர்களை உயிராக நினைக்கிறது என்றெல்லாம் வசனம் பேசும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பெற்றது முதல், தமிழகத்தில் பாசனக் கால்வாய்கள் சரி வரத் தூர் வாரப்படுவதில்லை, தமிழகத்தின் மொத்த சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது, சிறு மழை பெய்தாலும் வயலில் நெற்பயிர்கள் மூழ்கி நாசமடைகின்றன, விவசாயப் பொருட்களின் கொள்முதலில் ஏகப்பட்ட குளறுபடிகள் என விவசாயிகளின் வாழ்வு அந்தரத்தில் ஊசலாடுகிறது. இதே நிலை தொடருமானால் தமிழகத்தில் தானியப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உண்டாகிவிடும்.


எனவே, அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயப் பெருமக்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்குவதோடு, தமிழகத்தில் உள்ள அரசு உணவு சேமிப்புக் கிடங்குகளை உடனே சீர்படுத்த வேண்டுமென தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement