அக்னி பிரவேசம்

வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த தீலிப் என்ற எட்டு வயது சிறுவன் தன் தந்தையுடன் தமிழகத்தை சுற்றிப் பார்க்கவருகிறான்,திருச்சியில் தங்கியிருக்கும் போது திடீரென ஒரு நாள் இரவு படுக்கையில் 'ஜானு..ஜானு' என்று பிதற்றுகிறான், அவனை உலுப்பி எழுப்பியதும் நல்ல தமிழில் பேசுகிறான், என்ன வேடிக்கை என்றால் அந்த சிறுவனுக்கு தமிழ் சுத்தமாக தெரியாது! என்பதுதான்.
கும்பகோணம் நாகேஸ்வரத்தில் உள்ள தனது மணைவி ஜானகி வீட்டிற்கு போகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறான்.
அங்கே போனால் கணவனை இழந்த இளம் விதவையான ஜானகி,அவளது அப்பா சங்கரய்யர்,மற்றும் குடும்பத்தினர் ஏகப்பட்ட பிரச்னைகளுடன் இருக்கின்றனர்
அவர்கள் அனைவரையும் மிகவும் தெரிந்தது போல அன்னியோன்யமாக பேசுகிறான் பழகுகிறான்.,அவர்கள் பிரச்னையை எல்லாம் தந்தையின் துணை கொண்டு தீர்த்துவைக்கிறான்.
நீ யாராப்பா எனும்போது நான்தான் நாராயணன் என்கிறான்.
யார் அந்த நாராயணன்?
ஒரு பிளாஷ்பேக்
ஜானகியின் கணவனான நாராயணன் சம்பாத்தியம் எதுவும் இல்லாமல் இசையே வாழ்க்கையாகக் கொண்டுள்ளான் இதனால் அனைவரது வசைக்கும் ஆளாகிறான் ஒரு கட்டத்தில் மன உளைச்சலால் தற்கொலையும் செய்து கொள்கிறான்.
அந்த நாராயணன்தான் மறுபிறவி எடுத்து திலீப் ரூபத்தில் வந்துள்ளான் என்பது அனைவருக்கும் மெதுவாக புரிகிறது
அடடா நாராயணனை புரிந்து கொள்ளாமல் அவனது இறப்புக்கு காரணமாக இருந்துவிட்டோமே என சங்கரய்யர் உள்ளீட்டோர் மனம் கலங்கி பரிகாரமாக சிறுவன் நாராயணனை கொண்டாட நினைக்கும் போது சிறுவன் மறுபடி திலீப்பாக மாறி, 'ஆமாம் நான் எங்கு இருக்கிறேன்'?என்று ஆங்கிலத்தில் பேசி உடனே அமெரிக்கா சென்றுவிடுகிறான்.
ஒரு அக்னி பிரேவேசத்தில் இருந்து மீண்ட ஜானகி மீண்டும் தனிமையில் தவித்து நிற்கிறாள்
இதுதான் அக்னி பிரவேசம் நாடகத்தின் கதை
நாடகத்தை திரைக்கதைக்கு உரிய பாணியில் காரைக்குடி நாராயணன் சுவராசியமாக எழுதியிருக்கிறார், அதிலும் நாராயணன் வெள்ளித்தட்டை அடகு வைத்த விஷயத்தில் அவரது வார்த்தை விளயைாட்டு அரங்கத்தையே அதிரவைக்கிறது.
நாடகக்காவலர் ஆர்.எஸ்.மனோகரின் பேத்தியான கலை இளமணி பட்டம் பெற்ற ஸ்ருதி நாடகத்தை இயக்கி நாடகத்தின் நாயகியாகவும் திறம்பட நடித்துள்ளார்.இடைவேளை முடிந்ததும் தனது சகோதரியின் கேரக்டரில் வந்து ஒரு நடனமும் ஆடுகிறார்.
சிறுவன் தீலிபாக வந்த பரம்வீர்சிங் தனது அசாதரணமான நடிப்பால் காட்சிக்கு காட்சி கைதட்டல் பெறுகிறான்.
தற்கொலை செய்து கொண்ட நாராயணன் தனது பாத்திரத்தை செம்மையாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
நாடகம் என்பது வசனங்களால் நிரப்பப்பட்டு சுகமாக சென்று சுபமாக முடியும் என்ற பழமையான விதிகளை எல்லாம் தவிர்த்து, தகர்த்து இந்த நாடகம் வித்தியாசமாக உள்ளது,நாடக ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
-எல்.முருகராஜ்