திரிபுரா உயிரியல் பூங்காவில் பிறந்த மூன்று புலிக்குட்டிகள்

அகர்தலா : திரிபுராவின் செபாஹிஜாலா உயிரியல் பூங்காவின் வரலாற்றில் முதன்முறையாக, அங்குள்ள புலி ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் செபாஹிஜாலா மாவட்டத்தில் செபாஹிஜாலா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு, 53 வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அகர்தலாவில் இருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ள இந்த பூங்காவில் பராமரிக்கப் படும் சிங்கம், புலி, யானை, குரங்கு உள்ளிட்டவற்றை காண, ஏராளமானோர் படையெடுத்து வருகின்றனர்.

விலங்கு பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, மேற்கு வங்கத்தில் இருந்து ஒரு ஜோடி புலிகள் இந்த உயிரியல் பூங்காவுக்கு கடந்தாண்டு பிப்ரவரியில் கொண்டு வரப்பட்டன.

இந்த ஜோடிக்கு, கடந்த 11ம் தேதி மூன்று புலிக்குட்டிகள் பிறந்தன. இதுகுறித்து உயிரியல் பூங்கா இயக்குநர் பிஸ்வஜித் தாஸ் கூறியதாவது:

கடந்த 1972ல் துவங்கப்பட்ட இந்த பூங்காவில் புலிக்குட்டிகள் பிறப்பது இதுவே முதன்முறை. தாயும், குட்டிகளும் ஆரோக்கியமாக உள்ளன.

அவற்றை கண்காணிப்பதற்காகவே, புதிதாக 11 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement