அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் காலமானார்!

ஊட்டி: இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரும், பத்மவிபூஷன் விருது பெற்ற அணு விஞ்ஞானியுமான எம்.ஆர்.சீனிவாசன் ஊட்டியில் இன்று (மே 20) காலமானார். இவருக்கு வயது 95.
பெங்களூருவில் ஜனவரி 5ம் தேதி 1930ம் ஆண்டு எம்.ஆர்.சீனிவாசன் பிறந்தார். இவர் 1950ம் ஆண்டு இயந்திர பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் 1952ல் முதுகலைப் பட்டத்தை முடித்தார். 1954ல் கனடாவின் மாண்ட்ரீலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
இவர் செப்டம்பர் 1955ம் ஆண்டு அணுசக்தி துறையில் சேர்ந்தார். நாட்டின் பல்வேறு அணு சக்தி நிலையங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவின் அணு சக்தி திட்டங்கள், அது தொடர்பான கொள்கை உருவாக்குவது என அனைத்திலும் இவரது பங்களிப்பு இருந்துள்ளது.
அணுசக்தி வாரிய தலைவர், அணு சக்தி துறை செயலாளர் என பல்வேறு உயர் பதவிகளையும் வகித்துள்ளார். அவரது சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு அவருக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
ஓய்வுக்கு பிறகு ஊட்டியில் வசித்து வந்த அவர், இன்று (மே 20) காலமானார். அவரது மறைவுக்கு, விஞ்ஞானிகள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி இரங்கல்
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் முன்னோடியான எம்.ஆர். ஸ்ரீனிவாசனின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அணுசக்தி உள்கட்டமைப்பை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
பல இளம் விஞ்ஞானிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்ததற்கு, இந்தியா எப்போதும் அவருக்கு நன்றி தெரிவிக்கும். இந்த சோகமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கார்கே இரங்கல்
காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள பதிவில், ''பத்மவிபூஷன் விருது பெற்ற அணு விஞ்ஞானி எம்.ஆர். ஸ்ரீனிவாசனின் மறைவு, இந்தியாவின் அறிவியல் துறைக்கு பேரிழப்பு ஆகும். இவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை அணு சக்தி துறையில் வளர்ச்சியை உருவாக்கியது. இவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், '' எம்.ஆர்.சீனிவாசன் நாட்டில் 18 அணு சக்தி நிலையங்களை உருவாக்குவதற்கு தலைமை வகித்து பணியாற்றினார். நாடு தன்னிறைவு அடைவதற்கு பேருதவி புரிந்தார். தேசத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்ட விஞ்ஞானியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.






மேலும்
-
சென்னையில் மோசமான வானிலை நிலவரம்; தரை இறங்க முடியாமல் வட்டமடிக்கும் விமானங்கள்!
-
மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம்
-
முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன்
-
பிரீமியர் லீக் போட்டி: சென்னை அணி பேட்டிங்
-
பகையை துாண்டி பொய்களை பரப்பிய பாக்., தளபதிக்கு பதவி உயர்வு!
-
முன்கூட்டியே துவங்கும் பருவமழை; கேரளாவில் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்தது வானிலை மையம்!