கல்வராயன்மலையில் மீண்டும் தலைதுாக்கும் கள்ளச்சாராயம்

1

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையான கல்வராயன்மலையில் இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான காடுகளும், பல அருவிகளும் உள்ளன.

இது சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. கல்வராயன் மலையை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாளாக இருந்து வருகிறது.

இத்தனை சிறப்பு வாய்ந்த இம்மலைத் தொடர் சாராய உற்பத்தியின் முக்கிய மையமாகவும் விளங்குகிறது. எளிதில் செல்ல முடியாத மலை இடுக்குகளில் இயற்கையான நீரூற்று உள்ள இடங்களில் சாராய ஊறல் வைத்து அதனை காய்ச்சி வடிக்கும் சாராயத்தை மாவட்டம் முழுதும் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

இது காலம் காலமாக கொடி கட்டி பறக்கும் முக்கிய சட்டவிரோத தொழிலாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி நகரில் ஏற்பட்ட 67 விஷ சாராய சாவுகள் தமிழகத்தையே உலுக்கியது. அதன் பிறகு கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தற்போது அது மீண்டும் தலைத் துாக்கியுள்ளது. மலைக்குச் செல்லும் சாலையில் உள்ள எந்த செக் போஸ்டுகளிலும் வாகனங்களை முறையாக சோதனை செய்வதில்லை.

இதனால் சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான முக்கிய மூலப்பொருளான வெல்லம் எவ்வித தடையும் இன்றி வாகனங்கள் மூலம் மலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல் சாராய ஊறல் போடுவதற்கு பயன்படுத்தப்படும் பெரிய பேரல்கள் கூட எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி மலை மீது கொண்டு செல்லப்படுகிறது.

மலை மீதுள்ள இளைஞர்கள் பலரை சாராயம் காய்ச்சும் தொழிலுக்கு சட்ட விரோத கும்பல்கள் பயன்படுத்துவதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த விஷயத்தில் அரசு வேடிக்கை பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பிலிருந்தும் கோரிக்கை வலுத்துள்ளது.




-நமது நிருபர்-

Advertisement