உலகின் சிறந்த நன்கொடையாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்தியர்கள்

லண்டன்: டைம் இதழ், உலகின் மிகச்சிறந்த 100 நன்கொடையாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் இந்தியாவில் இருந்து ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி, விப்ரோ முன்னாள் சேர்மன் ஆசிம் பிரேம்ஜி, ஜெரேதா இணை நிறுவனர் நிகில் காமத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'டைம்' இதழ் பல்வேறு தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில், முக்கியமாக கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியிடுகிறது.
இந்நிலையில் உலகின் சிறந்த 100 நன்கொடையாளர்கள் குறித்த பட்டியலை அந்த இதழ் வெளியிட்டு உள்ளது.
முகேஷ் அம்பானி
அதில் இந்தியாவில் இருந்து ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது நீடா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக அந்த இதழில் கூறப்பட்டு உள்ளதாவது: முகேஷ் அம்பானி, ரிலையன்சின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு அந்த நிறுவனத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
அவரது மனைவி நீடா அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராக இருந்து, இந்தியர்களின் நலனுக்காக ஏராளமான தொண்டுகளை செய்து வருகிறார்.
கல்வி உதவி, பெண்கள் முன்னேற்றத்திற்கு தேவையான உதவிகளை வழங்குதல், கிராமப்புற மேம்பாடு, வேளாண்மை உதவி, நீர்நிலைகளை பாதுகாத்தல், மருத்துவமனை கட்டுவதற்கான உதவி என ஏராளமான செயல்களை செய்து வருகிறார்.
2024ம் ஆண்டில் முகேஷ் அம்பானி மற்றும் நீடா ஆகியோர் ரூ.407 கோடி நன்கொடை வழங்கி உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஆசிம் பிரேம்ஜி
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ஆசிம் பிரேம்ஜி, இந்தியாவின் சிறந்த நன்கொடையாளர்களில் ஒருவராக உள்ளார். இந்தியாவின் கல்வி முறையை மேம்படுத்துவதற்கு தனது சொத்தை செலவு செய்து வருகிறார்.
25 ஆண்டுகளுக்கு முன்பே, நன்கொடையாக கோடிக்கணக்கில் தனது நிறுவனத்தின் கோடிக்கணக்கான பங்குகளை வழங்கினார். மேலும் 2023- 2024ம் நிதியாண்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் பிற துறைகளில் கவனம் செலுத்தும் 940 நிறுவனங்களுக்கு இதுவரை 9 ஆயிரம் கோடி அளவுக்கு நன்கொடை வழங்கி உள்ளார். 80 லட்சம் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர்.
நிகில் காமத்
இந்த பட்டியலில் இடம்பெற்ற மற்றொரு இந்தியர் நிகில் காமத். 36 வயதில் நன்கொடை துவங்கினார். சுற்றுச்சூழல் மற்றும் கல்வித்திட்டங்களுக்கு நன்கொடை அளித்து வருகிறார். ' யங் இந்தியா நன்கொடையாளர்கள் உறுதிமொழி( YIPP) என்ற சொந்த அமைப்பை துவக்கினார். 300 பள்ளிகள சிறந்த கணினிகள், தொழில் ஆலோசன மற்றும் பிற சேவைகளுடன் மேம்படுத்துதல் போன்ற திட்டங்களுக்கு நிதியளித்து உள்ளன.
இவர் மற்றும் அவரது சகோதரர் நிதில் இணைந்து ரெயின்மேட்டர் அறக்கட்டளைக்கு 100 மில்லியன் டாலர் அதிகமாகநிதி ஒதுக்கி உள்ளனர். இது கால நிலை மாற்றத்திற்கான தீர்வுகளில் கவனம் செலுத்துகிறது.
இந்த பட்டியலில்
டேவிட் பெக்கம்
மைக்கேல் ப்ளூம்பெர்க்
ஓபரா வின்ப்ரே
மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ்
வாரன் பபெட்
ஆசிம் பிரேம்ஜி
ராபரட் ஸ்மித்
ஜேக் மா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.
