நெடுஞ்சாலையில் லாரி பழுது 10 மணி நேரம் 'டிராபிக் ஜாம்'

வேலுார்:வேலுார் மாவட்டம், பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பகுதியில், மேம்பாலம் அமைக்கும் பணி நடப்பதால், வாகனங்கள் செல்ல சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணியளவில் சூளகிரியிலிருந்து சென்னைக்கு கிரானைட் கற்கள் ஏற்றிச்சென்ற லாரி, வேகத்தடையில் ஏறி, இறங்கியதில், பின் சக்கர, 'சேஸ்' உடைந்து நடுரோட்டில் நின்றது.

அதிகளவு எடையுடைய வாகனம் என்பதால், அதை உடனடியாக சரிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டது. குறுகலான சாலை, ஒரு வழிப்பாதை துண்டிக்கப்பட்டது. இதனால், அவ்வழியாக சென்ற வாகனங்கள் 10 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன. 5 கி.மீ.,க்கும் மேலான துாரம் வரை இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பள்ளிகொண்டா போலீசார், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒருவழிப்பாதையாக மாற்றி, இரு பக்கமிருந்து வரும் வாகனங்களை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு பக்கம் என மாற்றி, மாற்றி அனுப்பினர். வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பழுதான லாரி காலை, 10:00 மணிக்கு சரி செய்யப்பட்ட பின், போக்குவரத்து சீரானது.

Advertisement