'பார்க்கிங்' கட்டணத்தை எதிர்த்து லாரி உரிமையாளர்கள்... வேலை நிறுத்தம்! துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கும் அபாயம்

காசிமேடு :சென்னை துறைமுகத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள 'பார்க்கிங்' பிளாசாவில் 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என, சமீபத்தில், சென்னை துறைமுக ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும் என, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்டம் அறிவித்துள்ளனர். வரும் 22ம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் துறைமுகம், எண்ணுார், காட்டுப்பள்ளி துறைமுகங்களில், பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடக்கிறது.
இதில், சென்னை துறைமுகத்தில் சி.சி.டி.எல்., - சி.ஐ.டி.பி.எல்., என்ற தனியார் சரக்கு பெட்டக முனையங்களும், எண்ணுார் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் தனியார் நிர்வகிக்கும் கன்டெய்னர் முனையங்களும் செயல்பட்டு வருகின்றன.
இதில் துறைமுகத்தை சார்ந்து, சென்னையை ஒட்டி, 40க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் பொதுத்துறை சரக்கு பெட்டக நிலையங்கள் அமைந்துள்ளன.
சரக்கு பெட்டக நிலையங்களில் இருந்து, சென்னை துறைமுகத்திற்கு கன்டெய்னர்களை எடுத்து செல்வதில் லாரி உரிமையாளர்களுக்கும், சரக்கு பெட்டக நிலைய உரிமையாளருக்கும் வாடகை உயர்வு, ஒதுக்கீடு, குறித்த காலத்தில் வாடகை வழங்குவது உள்ளிட்டவற்றில் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சென்னை துறைமுத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 'கன்டெய்னர் பார்க்கிங் பிளாசா'வில், ஏப்ரல் முதல், 550 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என, சென்னை துறைமுக ஆணையம் அறிவித்தது.
இதற்கு, அனைத்து டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் நலச்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பலகட்ட பேச்சுக்கு பின், 100 ரூபாயாக குறைக்கப்பட்டது.
12 சங்கங்கள்
இந்நிலையில், பார்க்கிங் கட்டணத்தை திரும்ப பெறக்கோரி, அனைத்து துறைமுக டிரைலர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் கோபிநாத் தலைமையில், நேற்று 12 சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 100க்கும் மேற்பட்ட டிரைலர் லாரி உரிமையாளர்கள் பங்கேற்று, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து, அனைத்து துறைமுக டிரைலர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் கோபிநாத் கூறியதாவது:
எண்ணுார், காட்டுப்பள்ளி துறைமுகத்தில், 'பார்க்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
ஆனால், சென்னை துறைமுகத்தில் எந்தவித வசதியும் செய்யாமல், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கின்றனர்.
சென்னை துறைமுகம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், அனைத்து கன்டெய்னர்களுக்கும், 'பார்க்கிங்' கட்டணமாக, நாள் ஒன்றிற்கு 100 ரூபாய் வசூலிக்கப்படும் என, அறிவித்துள்ளது.
4,500 கன்டெய்னர்கள்
பார்க்கிங் வசதி இல்லாமல் துறைமுகம் அமைத்ததே தவறு. கடந்த 2014 முதல் கன்டெய்னர் லாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வாடகை உயர்த்தப்படவில்லை.
சி.சி.டி.எல்., நிறுவனம், தன் வசதிக்காக மட்டுமே, 'பார்க்கிங் பிளாசா' வசதியை செய்துள்ளது. எனவே, பார்க்கிங் கட்டணத்தை, சி.சி.டி.எல்., தான் ஏற்க வேண்டும்.
இதை எதிர்த்து, 22ம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு சென்னை துறைமுகத்தில் அனைத்து டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய போவதில்லை. அந்த வகையில், 4,500 கன்டெய்னர் லாரிகள் ஓடாது.
இந்த மூன்று நாட்களுக்குள் கட்டணம் வசூலிப்பதை வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால், சென்னை துறைமுகம், எண்ணுார், காட்டுப்பள்ளி துறைமுகம் என, அனைத்து துறைமுகங்களிலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். ஆனால், அத்தியாவசிய பொருட்களுக்கான கன்டெய்னர் லாரிகளுக்கு மட்டும் அனுமதி அளிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வேலை நிறுத்தத்தால், நாள் ஒன்றுக்கு, அரசுக்கு 100 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
அதுமட்டுமில்லாமல், குளிரூட்டப்பட்ட கன்டெய்னர் லாரிகள் வாயிலாக, துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டு, கப்பல்களில் வெளியூர்களுக்கு செல்லும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், இந்த வேலை நிறுத்தத்தால் கெட்டுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
