சிந்தனைக்களம்: உரக்க சொல்வோம், உரைக்கும்படி சொல்வோம்!

'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைகள் நிச்சயம் அதன் நோக்கத்தை நிறைவேற்றியுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கடந்த, 2016ல் பதான்கோட் விமானப்படை தளத்தில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது, உலகெங்கும் உள்ள சட்டப் புத்தகங்களில் கூறியுள்ளபடி, இந்த விவகாரத்தை இந்தியா கையாண்டது. பாகிஸ்தானுடன் கூட்டு விசாரணையும் நடத்தப்பட்டது.
அந்த தாக்குதல், நமக்கு புதிய பாடத்தை கற்றுத் தந்தது. அதாவது, மற்றொரு நாட்டின் ஆதரவோடு நடக்கும் பயங்கரவாத தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து யாருக்கும் நாம் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதை கற்றுக் கொண்டோம். இதை உலகுக்கும் கற்றுத் தந்தோம், துல்லிய தாக்குதல் வாயிலாக.
மவுனம் கலையும்
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2008ல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நடத்தப்படும் வன்முறைகளுக்கு நீண்ட வரலாறு உள்ளது.
மும்பை தாக்குதலின்போது பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் மீதான விசாரணையின்போது, பாகிஸ்தான் ராணுவம், அந்த நாட்டின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., மற்றும் அந்த நாட்டின் அரசுகளே, இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்புலமாக இருந்துள்ளன என்பதை உலகுக்கு காட்டினோம்; இதை பாகிஸ்தான் மறுக்கவும் இல்லை.
இந்த ஒரு சாதாரணமான, அனைவருக்கும் தெரிந்த உண்மையை உலக நாடுகளை ஒப்புக் கொள்ள வைத்தோம். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதல், பாகிஸ்தான் ஆதரவோடு தான் நடந்தது என்பதை, நம் ராணுவ நடவடிக்கைகளால் உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்தினோம்.
இந்த விஷயத்தில் இந்தியாவுக்கும், தாக்குதல்களை நடத்திய பாகிஸ்தானுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது என்பதை உலக நாடுகளுக்கு மீண்டும் உணர்த்தும் வகையிலேயே, ஏழு அனைத்துக் கட்சி குழுக்களை பல நாடுகளுக்கு அனுப்ப உள்ளோம்.
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய படைகள் மட்டுமல்ல, இந்தியர்கள் மட்டுமல்ல, அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம் என்பதை உலக நாடுகளுக்கு காட்டுவதுடன், இந்தியா - பாகிஸ்தான் இடையே யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதில், அவர்களுடைய மவுனத்தை கலைக்கவும் இந்த பயணம் நிச்சயம் உதவும்.
சர்வதேச விவகாரம்
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா, ராணுவ நடவடிக்கைகள் எடுக்கும் என்பது புதிய நடைமுறையாக இருக்கும் என்பதை உலக நாடுகளுக்கு கொண்டு சென்றுவிட்டோம்.
பயங்கரவாதிகள் தாக்கினால், அந்த நாட்டுக்குள் நுழைந்து நம் ராணுவம் தாக்கும் என்றும், அதற்கு யாருடைய அனுமதியும் எங்களுக்கு தேவையில்லை என்றும் ஆணித்தனமாக நம் நாடு சுட்டிக் காட்டியுள்ளது. மேலும், அணு ஆயுதம் என்ற பெயரில் பாகிஸ்தான் காட்டி வரும் பூச்சாண்டி முகத்தையும் கிழித்துள்ளோம்.
சிந்து நதிநீரை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தை நிறுத்தியது என, ராணுவம் அல்லாத அரசியல் நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது. இதுவும் உலக நாடுகளுக்கு புதிது. பயங்கரவாதத்தை இந்தியா மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்பதை பொட்டில் தெறித்தாற்போல் உலக நாடுகளுக்கு காட்டியுள்ளோம்.
பஹல்காம் தாக்குதலின்போது, ஹிந்துக்களை மட்டும் அவர்களுடைய மதத்தைக் கேட்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு இந்தியர்கள் அனைவரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த விஷயம் நம் நாட்டில் பெரிதாக பேசப்பட்டு உள்ளது.
மதத்தின் பெயரால், குறிப்பாக, ஹிந்து விரோத, சீக்கிய விரோத, புத்த மத விரோத நடவடிக்கைகள் தொடர்பாக உலக நாடுகளையும் பேச வைக்க வேண்டும். ஐ.நா.,வின் நிரந்தர பிரதிநிதியாக நான் இருந்தபோது, 2022 மார்ச்சில், அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த, ஐ.நா., கூட்டத்தில் இதை நம் நாடு சுட்டிக் காட்டியது.
நம் ராணுவம் அதன் நோக்கத்தை, இலக்கை நிறைவேற்றியுள்ளது. இந்த வெற்றியை, அரசியல் ரீதியில் கொண்டு செல்ல வேண்டும். பாகிஸ்தானுக்கு நாம் எவ்வளவு பதிலடி கொடுத்தாலும், பயங்கரவாத தாக்குதல்கள் ஆங்காங்கே நடக்கும்.
நாடு சுதந்திரம் அடைந்து, 78 ஆண்டுகள் கடந்த நிலையில், ஹிந்துக்களும், முஸ்லிம்களும் சேர்ந்து வாழ முடியாது என, பாகிஸ்தான் கூறியுள்ளது, அதன் மன ஓட்டத்தையே காட்டுகிறது. தங்களுடைய நாட்டின் முகவரியை அது காட்டிஉள்ளது.
காஷ்மீர் விவகாரம் என்பது எப்போதும் நீறு பூத்த நெருப்பாகவே இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது. மக்களின் நன்மதிப்பை இழந்துவிட்ட அந்த நாட்டின் ராணுவம் மற்றும் அதன் கைப்பாவையாக உள்ள அரசு, தொடர்ந்து ஆட்சியில் இருக்க, மக்களை துாண்டிவிடும் வகையில், காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து எழுப்பி வருகிறது.
இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் விவகாரம் வேறு, பயங்கரவாதம் வேறு என்பதை உலக நாடுகளுக்கு புரிய வைக்க வேண்டும். ஜம்மு - காஷ்மீர் ஒரு சர்வதேச விவகாரம் என்பதை பல நாடுகள் ஏற்க மறுக்கின்றன.
அரசியல் நெருக்கடி
பயங்கரவாதத்துக்கு எதிராக நம் புதிய நடைமுறையின் வாயிலாக தொடர்ந்து பதிலளிப்போம். அதே நேரத்தில், ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்கும் அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.
அதற்கு, ஏழு அனைத்துக் கட்சிக் குழுக்களின் பயணம் நிச்சயம் உதவும். இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர வேண்டும். அதே நேரத்தில் ஜம்மு - காஷ்மீரில் உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியையும் தொடர வேண்டும்.
ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை உலக நாடுகளை ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும். பாகிஸ்தானிடம் இதை கூறுவதைவிட, மற்ற நாடுகளை அதை ஏற்க வைத்து, அவற்றின் வாயிலாக பாகிஸ்தானுக்கு கூறுவோம். இந்த விஷயத்தில் நாம் உரக்கக் கூறுவோம், உரைக்கும்படி கூறுவோம்.
- டி.எஸ்.திருமூர்த்தி,
ஐ.நா.,வுக்கான முன்னாள் இந்திய நிரந்தர பிரதிநிதி

மேலும்
-
கர்நாடகாவில் அதி கனமழைக்கு வாய்ப்பு; 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
கத்திரி வெயிலில் காவிரியில் வெள்ளம்
-
கொலம்பியா விமானங்களுக்கு வெனிசுலாவில் அதிரடி தடை
-
தொழிலாளர்களுக்கான 44 சட்டங்களை நான்காக சுருக்கிய மத்திய அரசு : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
-
மழையால் பயிர் சேதம் : இழப்பீடு தர கோரிக்கை
-
திருநள்ளாறு - பேரளம் அகல பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டம்