பொது வேலை நிறுத்த கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்

சென்னை :நாடு முழுதும், தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டு இருந்த, வேலை நிறுத்த போராட்டம் பாகிஸ்தான் - இந்தியாவுக்கு இடையேயான போர் பதற்றத்தால், ஜூலை 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் வேலை நிறுத்த கோரிக்கைகளை விளக்கும் விதமாக, நாடு முழுதும், மாவட்ட தலைநகரங்களில், மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
எல்.ஐ.சி., உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கம் சார்பில், சென்னை, பல்லவன் சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., மாநில துணை பொது செயலர் கண்ணன், ஏ.ஐ.டி.யு.சி., பொது செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த, தொ.மு.ச., தலைவர் நடராஜன் கூறியதாவது:
மத்திய அரசின், தொழிலாளர் மற்றும் விவசாயிகள் தொடர்பான ஜனநாயக விரோத கொள்கைகளை கண்டித்து, பொது வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம்.
நான்கு சட்டத் தொகுப்புகளை திரும்ப பெறுவது, தேசிய பணமயமாக்கல் உள்ளிட்டவைக்கு எதிராக, ஜூலை 9ம் தேதி பொது வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
வேலை நிறுத்த கோரிக்கைகளை விளக்கும் விதமாக, பிரசார இயக்கங்கள் வாயிலாக, துண்டு பிரசுரம் வழங்குவது, சுவரொட்டி பிரசாரம் என வேலை நிறுத்தம் நடக்கும். மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டிய கோரிக்கைகளை, மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
★★