மதுபான கொள்கை முறைகேடு ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைது

ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, கடந்த 2022ல் புதிய மதுபான கொள்கையை மாநில அரசு அமல்படுத்தியது; இது, மாநில அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, அப்போது கலால் துறை செயலராக இருந்த வி.கே. சவுபே, இணைச்செயலர் கஜேந்திர சிங் உட்பட மதுபான நிறுவனங்களின் உரிமையாளர்கள், இடைத்தரகர்கள் என பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, தற்போது பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச்செயலராக உள்ள வி.கே. சவுபே மீது வழக்குப்பதிவு செய்ய ஊழல் தடுப்புப் பிரிவுக்கு மாநில அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து, சவுபே மீது வழக்குப்பதியப்பட்ட நிலையில், ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று அவரை கைது செய்தனர்.

Advertisement