ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம்: டிரம்ப் நம்பிக்கை

4

வாஷிங்டன் : ரஷ்ய - உக்ரைன் இடையே போர் நிறுத்த பேச்சு உடனடியாக துவங்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் போர் கடந்த 2022 முதல் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சிக்கிறார். இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு, புடினுடன் இரண்டு மணி நேரம் பேச்சு நடத்தினார்.

அதன் பின் அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கை:



ரஷ்ய அதிபர் புடினுடனான இரண்டு மணி நேர தொலைபேசி உரையாடல் நன்றாக அமைந்தது. ரஷ்யாவும், உக்ரைனும் உடனடியாக போர் நிறுத்த பேச்சுக்களைத் துவங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதற்கான நிபந்தனைகள் என்ன என்பது இரு தரப்பினராலும் முடிவு செய்யப்படும். இந்த பயங்கரமான போர் முடிந்தவுடன் அமெரிக்காவுடன் பெரிய அளவில் வர்த்தகம் செய்ய ரஷ்யா விரும்புகிறது.

ரஷ்யாவுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளையும் வளத்தையும் உருவாக்குவதற்கு ஒரு அற்புதமான வாய்ப்பு உள்ளது. அதன் திறன் வரம்பற்றது. அதேபோல், உக்ரைனும் வர்த்தகத்தை பயன்படுத்தி தன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “போர் நிறுத்தத்திற்கான காலக்கெடு குறித்து டிரம்பும், புடினும் விவாதிக்கவில்லை. அனைவரும் இது விரைவில் நடக்க வேண்டும் என விரும்புகின்றனர்,” என்றார்.

டிரம்ப் - புடின் பேச்சுக்கு இடையே ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டன், ரஷ்யாவுக்கு அழுத்தம் தரும் வகையில் புதிய பொருளாதார தடைகளை நேற்று அறிவித்தன. இதில் இணைய அதிபர் டிரம்ப் மறுத்துவிட்டார்.

Advertisement