அங்கீகாரம் இல்லாத மருத்துவ கல்லுாரிகளில் சேராதீர்: என்.எம்.சி.,

சென்னை:'அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டாம். வெளிநாடுகளில் படித்து வந்து, இந்தியாவில் மருத்துவம் பார்க்கலாம் என்று கூறுவதையும் நம்ப வேண்டாம்' என, தேசிய மருத்துவ ஆணையமான, என்.எம்.சி., அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, ஆணையத்தின் செயலர் ராகவ் லங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

மருத்துவ படிப்புகளை துவங்கவும், தொடர்ந்து நடத்தவும் ஆணைய அங்கீகாரம் அவசியம்.

சில கல்லுாரிகள், அத்தகைய அனுமதி இல்லாமல் மாணவர் சேர்க்கையை நடத்தி வருவது கண்டறியப்பட்டது.

இதுபோன்ற கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கை சட்டப்பூர்வமாக செல்லாது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிங்கானியா பல்கலை உரிய அங்கீகாரம் இல்லாமல், மாணவர் சேர்க்கை நடத்தியதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதேபோல, வெளிநாடுகளில் எந்த வகையான மருத்துவ படிப்புகளை படித்தாலும், இந்தியாவில் மருத்துவ சேவைகளை மேற்கொள்ளலாம் என, மாணவர்களை சிலர் தவறாக வழிநடத்துகின்றனர்.

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோர், இந்தியாவில் டாக்டராக தொடர, பல்வேறு வழிமுறைகள் உள்ளன. தகுதித்தேர்வு, உள்ளுறை பயிற்சி, பாடத்திட்டம் மற்றும் பயிற்று மொழி தகுதிகள் என, பல கட்டுப் பாடுகள் உள்ளன.

இவை அனைத்தையும் நிறைவு செய்தால் மட்டுமே, அவர்களால் இந்தியாவில் டாக்டர்களாக பதிவு செய்ய முடியும்.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மருத்துவம் படிப்பதற்கு, ஆணைய விதிகளை கடைப்பிடிப்பது அவசியம். எனவே, இந்தியாவில் எந்தெந்த மருத்துவ கல்லுாரிகள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன என்பதை, ஆணையத்தின் இணையதளத்தில் தெரிந்து கொண்டு, மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

அங்கீகாரம் பெறாத கல்லுாரிகள், மருத்துவ படிப்பில் சேர அழைப்பு விடுத்தால், ug@nmc.org.in என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 011 - 2536 7033 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement