சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அறிவித்தார் டிரம்ப்; சிறப்புகள் ஏராளம்!

7


வாஷிங்டன்: சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள 'கோல்டன் டோம்' எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.


சீனா மற்றும் ரஷ்யாவால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்கும் நோக்கில், 'கோல்டன் டோம்' எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அமைக்கப்படும் என டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.

இந்த பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு 175 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பு படி ரூ.14.7 லட்சம் கோடி) செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு எதிரி செயற்கைக்கோளை இடைமறிக்கும் திறன் கொண்டது. சிறிது நேரத்தில் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.




இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது: பிரசாரத்தின் போது, ​​வெளிநாட்டு ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலில் இருந்து நமது தாயகத்தைப் பாதுகாக்க ஒரு அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவேன் என்று அமெரிக்க மக்களுக்கு உறுதியளித்தேன். அதைத்தான் இன்று நாம் செய்து கொண்டிருக்கிறோம். ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தனது இரண்டாவது அதிபர் பதவிக்காலம் முடிவதற்குள் நிறைவடையும்.


இன்று இந்த அதிநவீன அமைப்புக்கான கட்டடக்கலையை அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாலிஸ்டிக், ஹைப்பர் சோனிக் ஏவுகனைகளை அழிக்கும் வல்லமை கொண்ட 'கோல்டன் டோம்' கேம் சேஞ்சராக இருக்கும்.



துணைத் தலைவரான ஜெனரல் மைக்கேல் குட்லின், கோல்டன் டோம் திட்டத்தை செயல்படுத்துவதற்கும், மேற்பார்வையிடுவதற்கும் தலைமை தாங்குவார். இந்த முயற்சிக்கு ராணுவத் தலைவர்கள் வலுவான ஆதரவைத் தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement