கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4வது நாளாக மழை


கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று, 4வது நாளாக மழை பெய்தது. காவேரிப்பட்டணத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது.
தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த, 17 முதல் தினந்தோறும் மாலை மற்றும் இரவு நேர மழையால் அணைகள், ஏரி, குளம், குட்டைகள் உட்பட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி அடுத்த பெத்தனப்பள்ளி, பெத்ததாளாப்பள்ளி, அக்ரஹாரம், திருவண்ணாமலை சாலை உள்ளிட்ட பகுதிகளின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. நேற்று முன்தினம் பெய்த மழையால் காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் பல பகுதிகள்பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மிட்டஹள்ளி பஞ்.,ல், உள்ள எம்.ஜி.ஆர்., நகர் மற்றும் தாளமடுவு போன்ற பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி, ஒன்றரை அடிக்கு மேல் வெள்ளம் சூழ்ந்தும், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. கடந்தாண்டும் இதேபோல நிலை இப்பகுதியில் ஏற்பட்டபோது மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, அங்கு மழைநீர் வடிகால் அமைக்கப்படும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கூறினார். ஆக்கிரமிப்புகள் ஓரளவிற்கு அகற்றப்பட்ட போதும், மழைநீர் வெளியேற வழியில்லாததால், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து, பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை, 4:00 மணி முதல் சந்துார், காவேரிப்பட்டணத்தில் மீண்டும் மழை பொழிய துவங்கியது. இப்பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றி, அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, கோரிக்கை எழுந்துள்ளது.



* கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் டி.சி.ஆர்., சர்க்கிள் பஸ் நிறுத்தம், ஆவின் பால் டைரி முன்பு மற்றும் ஆவின் மேம்பாலத்தில் இருந்து அக்ரஹாரம் செல்லும் சாலை என, 3 இடங்களில், சாலையில் மழை நீர் தேங்குகிறது. இச்சாலைகளில் தினமும், 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருவதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
* போச்சம்பள்ளி, மத்துார் சுற்று வட்டார பகுதிகளான கண்ணன்டஹள்ளி, ஆம்பள்ளி, நடுப்பட்டு, கண்ணுகானுார், புலியூர், கரடியூர், கூச்சானுார், வெப்பாலம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை, 11:00 மணி முதல் விட்டு, விட்டு மழை பெய்தது.

Advertisement