முன்னதாக துவங்கிய குற்றால சீசன்

தென்காசி,:திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், களக்காடு பகுதியிலும் சாரல் மழை பெய்தது.

தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை சீசன் துவங்கி விட்டது. செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் அடவிநயினார், கருப்பாநதி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது.

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூனில் துவங்கும் சீசன், மூன்று மாதங்களுக்கு களை கட்டும். இந்த ஆண்டு சற்று முன்னதாக, மே, 15ம் தேதியில் இருந்து தென்மேற்கு பருவக்காற்று வீசத் துவங்கி விட்டது. நேற்று முன்தினம், குற்றால அருவிகளில் அதிக தண்ணீர் கொட்டியது. நேற்று காலையும், குளிக்கும் அளவு தண்ணீர் விழுந்தது. சிறிது நேரம் பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின், குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது, விடுமுறை காலம் என்பதால், குற்றாலத்தில் பயணியர் குவிய துவங்கியுள்ளனர்.

Advertisement