அரசியல் சாசனத்துக்கு எதிரானது என நிரூபிக்காவிட்டால் தலையிட முடியாது; வக்ப் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடில்லி: வக்ப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சமீபத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு இதை விசாரித்து வந்தது.
அப்போது, சில குறிப்பிட்ட பிரிவுகளை செயல்படுத்துவதை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு கூறியிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் எந்த ஒரு இடைக்கால உத்தரவையும் அமர்வு பிறப்பிக்கவில்லை.
இந்த வழக்கு, தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முன்வைத்த வாதம்:
வக்ப் சொத்துகளை நீக்கும் அதிகாரம், வக்ப் கவுன்சிலில் முஸ்லிம் அல்லாதோர் இடம் பெறுவது, அரசு நிலமா என்பதை முடிவெடுக்கும் அதிகாரத்தை கலெக்டர்களுக்கு வழங்குவது ஆகிய மூன்று முக்கிய பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்வதாக இந்த நீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி அதற்கான பதிலை தாக்கல் செய்துள்ளோம்.
ஆனால், தற்போது மனுதாரர்கள் தரப்பில் வேறு சில பிரச்னைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றம் ஏற்கனவே கூறியபடி, மூன்று முக்கிய பிரச்னைகள் குறித்து மட்டுமே விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதற்கு, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, ராஜிவ் தவான் உள்ளிட் டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கூறியதாவது:
எந்த ஒரு சட்டமும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டே தயாரிக்கப்படுகிறது என்ற அனுமானம் உள்ளது; அது இந்த சட்டத்துக்கும் பொருந்தும்.
இந்த திருத்த சட்டம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதை நிரூபிக்கும் வலுவான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.
உங்களுடைய தரப்பை நியாயப்படுத்தும் வகையில், இன்னும் வலுவான ஆதாரங்கள், விளக்கங்கள் தேவை. அவ்வாறு இல்லாதபட்சத்தில் இதில் நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
வழக்கின் விசாரணை இன்றும் தொடர்கிறது.