பாக்., உளவு அமைப்புடன் தொடர்பு; பஞ்சாபில் மேலும் 6 பேர் கைது

சண்டிகர் : பஞ்சாபில், பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உடன் தொடர்பில் இருந்து, பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஆறு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் படாலா என்ற இடத்தில் உள்ள மதுக்கடை வெளியே, கடந்த 17ல், கையெறி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அதிர்ஷ்டவசமாக இந்த குண்டுகள் வெடிக்கவில்லை.
விசாரணையில், இந்த சம்பவத்தில், நம் நாட்டில் தடை செய்யப்பட்ட, பி.கே.ஐ., எனப்படும் 'பப்பர் கல்சா இன்டர்நேஷனல்' என்ற பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பிருப்பதும், பாக்., பயங்கரவாதி ஹர்விந்தர் சிங் ரிண்டாவின் வழிகாட்டுதலின்படி, வெளிநாட்டைச் சேர்ந்த மனிந்தர் பில்லா, மன்னு அக்வான் ஆகியோரால் இந்த அமைப்பு இயங்குவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், பஞ்சாப் முழுதும் அதிரடி சோதனை நடத்திய போலீசார், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமைப்புடன் தொடர்பில் இருந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட, பி.கே.ஐ., அமைப்பைச் சேர்ந்த ஜதின் குமார், பரிந்தர் சிங், ராகுல் மாசி, ஆபிரகாம், சோஹித், சுனில் குமார் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகள், வெடி பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து, பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது:
படாலாவில் உள்ள மதுக்கடை வெளியே சமீபத்தில் நடந்த கையெறி குண்டு தாக்குதலில், இந்த கும்பலுக்கு தொடர்பு உள்ளது.
கைது செய்யப்பட்ட ஆறு பேரும், போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த மனிந்தர் பில்லா மற்றும் பி.கே.ஐ.,யின் மூளையாகச் செயல்படும் மன்னு அக்வான் ஆகியோரிடமிருந்து நேரடி அறிவுறுத்தல்களை பெற்று குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். ஆறு பேரிடமும் தீவிர விசாரணை நடக்கிறது. இதில் சம்பந்தப்பட்டோர் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு பின், பஞ்சாப், ஹரியானா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில், பாக்., உளவு அமைப்புடன் தொடர்புடைய 13 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பஞ்சாபில் மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில், சமீபத்தில், ஹரியானாவைச் சேர்ந்த யு டியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்கு இருமுறை சென்று வந்த அவர், அங்கு சகல வசதிகளை அனுபவித்துள்ளார். இந்நிலையில், பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளும், பாக்.,கின் பஞ்சாப் மாகாணத்தின் முதல்வருமான மரியம் நவாஸ் ஷெரீப் உடன், ஜோதி மல்ஹோத்ரா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் நேற்று வெளியாகின. பாகிஸ்தானில் வி.ஐ.பி., போல நடத்தப்பட்ட ஜோதி மல்ஹோத்ரா, லாகூர் உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்று, அந்நாட்டின் முக்கிய நபர்களை சந்தித்து பேசியதாகக் கூறப்படுகிறது.
மேலும்
-
ரூ.2,291 கோடி கல்வி நிதி வழங்குங்க; மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
-
சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர்; குவியும் வாழ்த்துகள்
-
சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அறிவித்தார் டிரம்ப்; சிறப்புகள் ஏராளம்!
-
பாதை வரிசை மாறிய பகுதியில் காலி மனை வாங்குவது சரியா?
-
கொரோனா தாக்கம் மீண்டும் ஆரம்பம்: மும்பையில் 2 பேர் பலி
-
அமெரிக்காவில் ஓடும் பஸ்சில் இந்திய வம்சாவளி வல்லுநர் குத்திக்கொலை