தற்கொலை பண்ணிக்குவேன்னு பயமா இருக்கு: தி.மு.க., பிரமுகர் மீது புகார் கூறிய மாணவி கதறல்

அரக்கோணம்: கல்லுாரி மாணவியை திருமணம் செய்து துன்புறுத்தியதாக, தி.மு.க., பிரமுகர் மீது, மாணவி புகார் கொடுத்துள்ள நிலையில், 'தற்கொலை பண்ணிக்குவேன்னு பயமா இருக்கு' எனக் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த காவனுாரை சேர்ந்தவர், தி.மு.க., ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வசெயல், 40. அரக்கோணம் பருத்திப்புதுாரை சேர்ந்தவர் கல்லுாரி மாணவி பிரித்தி, 21.
முறையீடு
இவரை காதலிப்பதாகக் கூறி, கடந்த ஜன., 31ல், 2வதாக தெய்வசெயல் திருமணம் செய்து கொண்டார். அவர் கடந்த, 2 மாதமாக பிரித்தியை அடித்து துன்புறுத்தி, தி.மு.க., பிரமுகர்களுக்கு இரையாக்க முயற்சித்ததாகக் கூறிய பிரித்தி, கடந்த, ஏப்., 5ல், தற்கொலைக்கு முயன்றார்.
பின், போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, அரக்கோணம், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ரவியை சந்தித்து முறையிட்டார். அவர், நீதி கிடைக்கும்வரை ஆதரவாக இருப்பதாக, பிரித்தியிடம் கூறினார்.
இந்நிலையில், பிரித்தி நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: போலீஸ்காரங்க வீட்டுக்கு வராங்க, போட்டோ எடுக்கறாங்க. ஆனா, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கமாட்டேங்குறாங்க. குற்றவாளி மாதிரி, என்னை ட்ரீட் பண்றாங்க. 20 பொண்ணுங்களை வெச்சு, தி.மு.க., முக்கியஸ்தர்களுக்கு தெய்வசெயல் விருந்தாக்குவதாக சொல்லியிருந்தேன்.
அதை வெச்சு, அந்த பொண்ணுங்க யாருன்னு கேட்டு தொந்தரவு பண்றாங்க. யாருன்னு போலீஸ் தான கண்டுபிடிக்கணும். ஆனா, போலீஸ்கிட்ட நான் ஆதாரமா கொடுத்தத்தையெல்லாம் வீடியோவா போடுறாங்க; எப்படின்னு தெரியல.
எல்லா மீடியாக்காரங்களும், என்னோட முகத்தை மறைத்துதான் போடுறாங்க. ஆனா, அவங்க என் முகத்தை அப்படியே வெளியிடுறாங்க. இத எல்லாம் பார்த்ததால், தற்கொலை பண்ணிக்குவேன்னு பயமாக இருக்கு. எனக்கு இவ்வளவு சோதனையை கொடுத்த தெய்வசெயலை பிடிக்க மாட்டேங்குறாங்க. சந்தோஷமா திரிய விட்டிருக்காங்க.
நீதி வாங்கி தரணும்
பாதிக்கப்பட்ட எனக்கு நீதி கிடைக்காதோங்கற மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கேன். இந்த உலகில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி சொல்ல யாருமே இல்லையா? பொதுமக்கள்தான் நீதி வாங்கி தரணும். இவ்வாறு அதில் பேசி உள்ளார்.
இந்நிலையில், தி.மு.க., இளைஞரணி செயலரும், துணை முதல்வருமான உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் தெய்வசெயல், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 'அவருக்குப் பதிலாக, கவியரசு என்பவர், அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்' என தெரிவித்துள்ளார்.


மேலும்
-
ரூ.2,291 கோடி கல்வி நிதி வழங்குங்க; மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
-
சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர்; குவியும் வாழ்த்துகள்
-
சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அறிவித்தார் டிரம்ப்; சிறப்புகள் ஏராளம்!
-
பாதை வரிசை மாறிய பகுதியில் காலி மனை வாங்குவது சரியா?
-
கொரோனா தாக்கம் மீண்டும் ஆரம்பம்: மும்பையில் 2 பேர் பலி
-
அமெரிக்காவில் ஓடும் பஸ்சில் இந்திய வம்சாவளி வல்லுநர் குத்திக்கொலை