தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

1


சென்னை: நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று (மே 21) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 3-4 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது. மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 12 மணி நேரத்தில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்.


நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று (மே 21) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை



தமிழக கடலோரப்பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement