பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்சென்ற பஸ் குளத்தில் விழுந்து விபத்து: 22 பேர் காயம்

ராஞ்சி: ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் இன்று பிற்பகல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஒரு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு குளத்தில் விழுந்தது. குழந்தைகள் 22 பேர் காயம் அடைந்தனர்.

இச்சாக் காவல் நிலையப் பகுதியில் உள்ள குத்ரா கிராமத்திற்கு அருகே, பள்ளி முடிந்து குழந்தைகள் கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

வேகமாக வந்த பஸ், திருப்பத்தை நோக்கிச் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து, குறுகிய சாலையில் இருந்து விலகி, சுமார் 15 அடி ஆழமுள்ள குளத்தில் விழுந்தது.
அப்பகுதி மக்கள் மீட்புப் பணிகளைத் தொடங்கினர். போலீசாரும் மாவட்ட நிர்வாகமும் தகவல் அறிந்த சிறிது நேரத்திலேயே வந்தனர்.
இச்சாக் போலீஸ் அதிகாரி சந்தோஷ் குமார் கூறியதாவது:
உள்ளூர்வாசிகளும் அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டு, நீரில் மூழ்கிய வாகனத்திலிருந்து குழந்தைகளையும், டிரைவரையும் வெளியே எடுத்தனர். பின்னர் ஒரு கிரேன் மூலம் பஸ்ஸை குளத்திலிருந்து மீட்டனர்.


அதிர்ஷ்டவசமாக, பஸ் குளத்தின் ஆழமான பகுதியில் மூழ்கவில்லை. காயமடைந்த அனைத்து குழந்தைகளும் ஆரம்பத்தில் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பெரும்பாலானவர்கள் முதலுதவிக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், பலத்த காயமடைந்த நான்கு குழந்தைகள் ஹசாரிபாக்கில் உள்ள ஷேக் பிகாரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.பஸ் டிரைவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. டிரைவர் குடிபோதையில் இருந்ததாக கண்டறியப்பட்டால்,கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு சந்தோஷ் குமார் கூறினார்.

Advertisement