கடற்கரை... கடற்கரை தானே...? எப்படி கல்லறையாக மாறியது? சீமான் கேள்வி

16

சென்னை: 'சென்னை மெரினா கடற்கரையில் நான்கு கல்லறை இருக்கிறது. அதை யார் இடிப்பது? கடற்கரை...கடற்கரை தானே...? எப்படி கல்லறையாக மாறியது?' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை அடையாறில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது: வருமான வரி, அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறீர்கள். ஆனால், சோதனையில் கைப்பற்றப்பட்ட ரொக்கம், ஆவணங்கள் பற்றிய தகவலை வெளிப்படையாக அறிவிக்காதது ஏன்? டாஸ்மாக் விவகாரத்தில் முதலில் ஒரு லட்சம் கோடி என்று சொன்னீர்கள். அதன்பிறகு ரூ.1000 கோடியானது, சரி அதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

இயற்கையின் அரும்பெரும் கொடையான சதுப்புநில ஏரியை பள்ளிக்கரணை குப்பை மேடாக்கியது யார்? இனிமேல் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். அப்படித்தானே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு 60 ஆண்டுகள் வாழ்ந்தவனை இடித்து வெளியே போடா என்றால் என்ன செய்வது.

இ.டி., ரெய்டில் இருந்து தப்பிக்க டில்லி போகத்தான் அவங்களுக்கு நேரம் இருக்கிறது. ஏராளமான அரசு கட்டடங்கள், குடியிருப்புகள், நீர் நிலைகளில் தான் அமைந்துள்ளன. அவற்றை இடிக்காமல் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை மட்டும் இடிப்பது ஏன்? சென்னை மெரினா கடற்கரையில் நான்கு கல்லறை இருக்கிறது. அதை யார் இடிப்பது? கடற்கரை...கடற்கரை தானே...? எப்படி கல்லறையாக மாறியது?

தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் மகள், டில்லியில் முதல்வராக இருந்த கெஜ்ரிவால், ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் ஆகியோரை இதே சாராய வழக்கில் தான் கைது செய்தீர்கள். தமிழகத்தில் மட்டும் ஏன் நடவடிக்கை இல்லை?

பாகிஸ்தானுக்கு எதிரான போர் நடத்திய இந்தியாவுக்கு ஆதரவாக டில்லி பா.ஜ., முதல்வரை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் பேரணி நடத்தியுள்ளார். ஆனால், அவங்க மற்றவர்களை தான் பி டீம் என்பார்கள்.

அதேபோல, போரை நியாயப்படுத்தி பேச வெளிநாடுகளுக்கு செல்லும் குழுவில், கூட்டணி கட்சியான அ.தி.மு.க., எம்.பி.,க்களுக்கு கூட இடமில்லை. ஆனால், கூட்டணியே வைக்காத தி.மு.க., எம்.பி., கனிமொழிக்கு இடம் கொடுத்துள்ளார்கள். அப்போ, யார் உண்மையான கூட்டணி, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement