பாகிஸ்தானில் திருமணம் செய்ய விரும்பிய பெண் யுடியூபர் ஜோதி!

7

புதுடில்லி: உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான பெண் யுடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தானில் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து உள்ளார். இது அவரது வாட்ஸ்அப் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.


@1brஹரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. யுடியூபில், 'டிராவல் வித் ஜோ' என்ற பெயரில் பயண சேனல் நடத்தி வரும் இவரை, பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் ஹரியானா போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவரது லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து ஆய்வு செய்கின்றனர்.


சமீபத்தில், டில்லியில் உள்ள பாகிஸ்தான் துாதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் என்பவரை, உளவு பார்த்ததாக இந்தியா வெளியேற்றியது. அவருக்கும், ஜோதி மல்ஹோத்ராவுக்கும் பழக்கம் இருந்தது. ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தான் செல்வதற்கு டேனிஷ் உதவியுடன் கடந்த ஆண்டு விசா பெற்றார். அவரது உதவியால் ஜோதி, அங்கு விவிஐபி போல் நடத்தப்பட்டார். பாகிஸ்தானில் அவர் மேற்கொண்ட பயணம் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ அமைப்பைச் சேர்ந்த அலி ஹசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்தியா திரும்பியதும், இருவரும் வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகள் மூலம் அடிக்கடி தகவல் பரிமாற்றம் செய்து வந்துள்ளனர்.

ஜோதி மல்ஹோத்ராவிடம் மத்திய உளவுத்துறையினர், போலீசார் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வரும்நிலையில், அதில் பல தகவல்கள் கிடைத்து வருகின்றன.


அதில், வாட்ஸ்அப் மூலம் அலி ஹாசன் என்பவருடன் செய்த கலந்துரையாடல் குறித்த தகவல்கள் கசிய துவங்கி உள்ளன. அதில், பாகிஸ்தானில் திருமணம் செய்து கொள்ள ஜோதி விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.


ஜோதி அனுப்பிய செய்தியில், ' பாகிஸ்தானில் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்,' எனக்கூறியுள்ளார்.

அதற்கு அலி ஹாசன் அளித்த பதிலில், ' ஜோதி, நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிக் கொள்கிறேன். எப்போதும் புன்னகையுடன் இருங்கள். வாழ்க்கையில் எப்போதும் ஏமாற்றம் வரக்கூடாது' என அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement