ராமதாஸ் - அன்புமணி இடையே பா.ஜ., சமாதான முயற்சி ஏன்?

2

சென்னை : பா.ம.க., பலவீனம் அடைவது தி.மு.க.,வுக்கு சாதகமாகி விடும் என்பதால், அக்கட்சி நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணியை சமாதானப்படுத்தும் முயற்சியில், பா.ஜ., தலைமை இறங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த 11ம் தேதி, மாமல்லபுரத்தில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தினாலும், ராமதாஸ் - அன்புமணி இடையே ஏற்பட்ட மோதலால், பா.ம.க.,வில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.



கடந்த 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த பா.ம.க., இதுவரை கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவிக்கவில்லை. தேசிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதாக, அன்புமணி கூறி வருகிறார்.


பா.ம.க.,வில், அப்பா, மகன் இடையே நடந்து வரும் மோதலால், அக்கட்சி பலவீனமடையும் வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு சாதகமாகி விடும் என்ற கவலை, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தலைமைக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.


கடந்த சட்டசபைத் தேர்தலின்போது, வட மாவட்டங்களில் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு பெரும் பலமாக இருந்தது பா.ம.க.,தான் என்பதால், பா.ம.க.,வில் சிதைவு ஏற்பட்டு விடக்கூடாது என அ.தி.மு.க., தலைமை நம்புகிறது.


அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இம்முறையும் பா.ம.க., இடம்பெறும் பட்சத்தில், எந்த ரூபத்திலும் பா.ம.க., பலவீனப்பட்டு விடக்கூடாது என்ற தகவலை, அ.தி.மு.க., தரப்பில் இருந்து அமித் ஷாவிடம் சொல்லி உள்ளனர்.


இதையடுத்து, தமிழக பா.ஜ., தலைவர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ம.க.,வில் நடக்கும் குழப்பங்கள் குறித்து, தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:



கடந்த 2021 சட்டசபை தேர்தலில், சென்னை மாநகர், புறநகர், திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில், அ.தி.மு.க., கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. ஆனாலும், கூட்டணிக்கு மொத்தமாக 75 இடங்கள் கிடைத்தன.


பா.ம.க.,வுக்கு கணிசமான ஓட்டு வங்கி உள்ள வேலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், சேலம் மற்றும் மேற்கு மாவட்டங்களில், அ.தி.மு.க., கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைத்தன. அப்பா, மகன் மோதலால் பா.ம.க., பலவீனமடைந்தால், இந்த தொகுதிகள் தி.மு.க., கூட்டணிக்கு சாதமாகி விடும் ஆபத்து உள்ளது.


வரும், 2026ல் தி.மு.க.,வை வீழ்த்த, வலுவான கூட்டணி அமைப்பதில் உறுதியாக இருக்கும் அமித் ஷா, அதற்கு எதுவும் தடையாக இருந்துவிடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார். எனவே, ராமதாஸ், அன்புமணி இடையே இணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில், அமித் ஷா இறங்கியிருக்கிறார்.


இது தொடர்பாக, தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம், அவர் பேசியிருக்கிறார். இது பா.ம.க.,வின் உட்கட்சி விவகாரம் என்றாலும், கூட்டணி நலன் கருதி, நட்பு அடிப்படையில் சமாதான நடவடிக்கைகளை, பா.ஜ., மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement