அரிசி சர்ச்சையில் சிக்கிய ஜப்பான் விவசாய அமைச்சர் ராஜினாமா

2

டோக்யோ: அரிசி குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் ஜப்பான் நாட்டின் விவசாய அமைச்சர் டகு எட்டோ ராஜினாமா செய்தார்.

ஜப்பான் அமைச்சரவையில் விவசாய அமைச்சராக இருப்பவர் டகு எட்டோ. ஜப்பானின் பிரதான உணவான அரிசியின் விலை, இந்த ஆண்டு கடுமையாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அவசரகால இருப்புக்களை விடுவித்தல் மற்றும் வெளிநாட்டு அரிசியை இறக்குமதி செய்தல் போன்ற நடவடிக்கைகளை ஜப்பான் அரசு எடுத்து வருகிறது.


இந்நிலையில் டகு எட்டோ, அரிசிக்கு ஒருபோதும் பணம் செலுத்தக்கூடாது.

நானே ஒருபோதும் அரிசி வாங்கியதில்லை. வெளிப்படையாகச் சொன்னால், என் ஆதரவாளர்கள் எனக்கு நிறைய அரிசி தருகிறார்கள். என் வீட்டில் இவ்வளவு அரிசி இருப்பதால் அதை விற்க முடியும் என்று பேசி பொதுமக்களின் கோபத்திற்கு ஆளானார்.
இவ்வாறு அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது ஜப்பான் அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னதாக, பிரதமர் ஷிகெரு இஷிபாவின் அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
அதை தொடர்ந்து அவர் தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

ராஜினாமா குறித்து டகு எட்டோ கூறியதாவது:

இந்தப் பணிக்கு தான் சரியான நபர் அல்ல என்று முடிவு செய்து, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன். அரிசியை சொந்தமாக வாங்கியதை தெளிவுபடுத்தி உள்ளேன். நான் பேசிய கருத்துகளால் பொதுமக்கள் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானார்கள். நான் அவ்வாறு பேசியதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு டகு எட்டோ கூறினார்.

Advertisement